கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு
1 min read
Minister P.K. Sekarbabu personally inspects the Thiruvaleeswarar temple in Keelappavur
9.7.2025
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் திருவாலீஸ்வரர் கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு பணி மேற்கொண்டார் அப்போது கோவில் திருப்பணிகளை 2 மாதத்திற்குள் முடித்திட வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் திருப்பணிகளை முடித்து கும்பாபிசேகம் நடத்துவற்காக கடந்த 2023ம் ஆண்டு ஜுன் மாதம் தமிழக அரசு சார்பில் ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலில் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சலனம் செய்து பாலாலயம் நடைபெற்றது.
பாலாலயம் நடைபெற்று சுமார் 2 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நடைபெறாததால் பக்தர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கோவிலில் திடீர் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் கும்பாபிசேக பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், பணிகளை தொடங்கி கும்பாபிசேகம் நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அங்கிருந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொவில் திருப்பணிகளை விரைந்து தொடங்கி 2 மாதத்திற்குள் முடித்திட வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன், இணை ஆணையர்கள் திருநெல்வேலி கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி அன்புமணி, செயற் பொறியாளர் ஆறுமுகம், உதவி கோட்ட பொறியாளர் அன்புராஜ், தென்காசி உதவி ஆணையர் செந்தில்குமார், குற்றாலம் உதவி ஆணையர் ஆறுமுகம், தென்காசி செயல் அலுவலர் பொன்னி மற்றும் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பொன் செல்வன், தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ், பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.