பிரதமர் மோடி முதல்முறையாக நமீபியா சென்றார்
1 min read
Prime Minister Modi visited Namibia for the first time
9.7.2025
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பின் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார். 57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
3 நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு பின்னர், பிரேசில் நாட்டில் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் கடந்த 6-ந்தேதி அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரை சென்றடைந்த அவர், அதன்பின், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 21-ம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியானது விளிம்பு நிலையில் உள்ளது என சுட்டி காட்டி பேசினார். அதனால், சர்வதேச அமைப்புகளில் விரிவான சீர்திருத்தங்களுக்கான அவசர தேவையையும் அவர் சுட்டி காட்டினார்.
இதேபோன்று இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனல் ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார்.
இதனை தொடர்ந்து, பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு அவர் நேற்று காலை சென்றார். அவரை, பிரேசிலின் பாதுகாப்பு துறை மந்திரி ஜோஸ் முசியோ மான்டீரோ பில்ஹோ விமான நிலையத்தில் வரவேற்றார்.
இதன்பின்னர், பிரேசிலியாவில் அந்நாட்டு அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இதுபற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பூமியை பாதிக்க கூடிய விசயங்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியின் முக்கியத்துவம் பற்றி சர்வதேச அரங்கில் விரிவாக பேசுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு அமைந்திருந்தது.
சுகாதாரம், தொழில் நுட்பம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவற்றுடன் தொடர்புடைய வெவ்வேறு நோக்கங்கள் பற்றியும் பேசினேன் என தெரிவித்து உள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தக இலக்குகளை நாங்கள் நிர்ணயித்து உள்ளோம். இது இந்தியா மற்றும் பிரேசில் இடையே பொருளாதார இணைப்புகளை ஊக்கப்படுத்தும். குறிப்பிடும்படியாக, விளையாட்டு மற்றும் சுற்றுலா வழியே மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதும் விவாதங்களில் சம முக்கியத்துவம் பெற்றிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் நமீபியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அந்நாட்டு ஜனாதிபதி நெடும்போ நந்தி-தைத்வா அழைப்பின்பேரில் நமீபியாவுக்கு அவர் சென்றார். பிரதமர் மோடியின் முதல் நமீபிய பயணம் இதுவாகும். இதேபோன்று இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு செல்லும் 3-வது பிரதமர் ஆவார்.