July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

திருவாரூரில் சமூகநீதி விடுதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

1 min read

Chief Minister M.K. Stalin inspects the Social Justice Hostel in Thiruvarur

10.7.2025
தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட, பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை ‘சமூகநீதி விடுதிகள்’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7.7.2025 அன்று உத்தரவிட்டார்.

“சமூகநீதி விடுதி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதையொட்டி, அதனை பார்வையிடும் நோக்கில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்றைய தினம் (10.7.2025) அரசு விழா நடைபெறும் திருவாரூர், எஸ்.எஸ்.நகர் செல்லும் வழியில், கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கான சமூகநீதி விடுதிகளுக்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சமூகநீதி விடுதியில் உள்ள நூலகம், சமையலறை உணவருந்தும் அறை, பொருள் இருப்பு அறை ஆகியவற்றை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விடுதியில் உள்ள மாணவ, மாணவியர்களிடம் அவர்களின் தேவைகள், விடுதியில் உள்ள வசதிகள், வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவை குறித்தும், உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், வார்டன்கள் பணிக்கு வருவது குறித்தும் கேட்டறிந்தார். அத்துடன் சமையலறைக்கு சென்று உணவு தயாரிக்கும் பணியாளர்களிடம், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் இருப்பு குறித்து கேட்டறிந்து, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூண்டி கலைவாணன், நாகை மாலி, திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன், தாட்கோ தலைவர் இளையராஜா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.