சர்வதேச விண்வெளி நிலையத்தில் பாசிப்பயறு, வெந்தய செடி வளர்க்கும் சுபான்ஷு சுக்லா
1 min read
Subhanshu Shukla grows spinach and fenugreek plants on the International Space Station
10.7.2025
ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ், பால்கன்-9 ராக்கெட் மூலம் கடந்த 25-ந்தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டார் இந்திய விண்வெளி வீரரரான சுபான்ஷு சுக்லா. அவருடன் அமெரிக்கா, போலந்து, அங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த 3 வீரர்களும் சென்றுள்ளனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும், ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் தொடர்ந்து 28 மணி நேரம் பயணித்து 26-ந்தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
அங்கு அவர்கள் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். சுபான்ஷு சுக்லா மட்டும் தனியாக சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக புவியீர்ப்பு விசை இல்லாத இடத்தில் பயிர்களின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக அவர் பூமியில் இருந்து பாசிப்பயறு மற்றும் வெந்தயத்தை எடுத்து சென்றார்.
விண்வெளி நிலையத்தில் அந்த விதைகளை முளைக்க வைத்துள்ளார். பாசிப்பயறு மற்றும் வெந்தய செடிகளின் வளர்ச்சியை தினமும் ஆய்வு செய்து வருகிறார்.
அவர் பூமிக்கு திரும்பும்போது அந்த செடிகளையும் கொண்டு வருவார். அந்த செடிகள் கர்நாடக மாநிலம் தார்வாட் கொண்டு செல்லப்பட்டு, வளர்க்கப்படும். இந்த பரிசோதனையை தார்வாட்டில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரவிக்குமார் ஹோசமணி மற்றும் தார்வாட்டின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த சுதீர் சித்தபுரெட்டி ஆகியார் வழிநடத்துகின்றனர்.
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரின் விண்வெளி ஆராய்ச்சிப்பணி நேற்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைகிறது. எனவே அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது இணைக்கப்பட்டு இருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் மூலம் அங்கிருந்து 13-ந்தேதி புறப்பட்டு, புளோரிடா கடற்கரைக்கு வெளியே 14-ந்தேதி தரையிறங்குவார்கள் என்று நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளியில் நுண்பாசி மாதிரிகளை சுபான்ஷூ சுக்லா ஆய்வு செய்தார். வருங்காலத்தில் இவை விண்வெளியில் உணவு, எரிசக்தி மற்றும் தூய காற்றைக் கூட வழங்கலாம்’ என்றனர்.
நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, ‘விண்வெளி சூழலில் நுண்ணியிர்களின் செயல்பாடு குறித்த இந்திய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சோதனையிலும் அவர் பங்கேற்றார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம அவர்கள் பூமிக்கு திரும்புவதை நாசா நேரலையில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது’ என்றனர்.
இதனிடையே சர்வதேச விண்வளி நிலையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, சக வீரர்களுடன் உற்சாகமாக உரையாடுகிறார். அவ்வாறு நடந்த ஒரு இனிமையான உரையாடலின்போது சகவீரர் ஒருவரிடம், ‘இஸ்ரோ நாடு முழுவதும் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காகவும் சில அற்புதமான ஆராய்ச்சிகளை வழங்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதைச் செய்வது உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’ என்று கூறினார்.
மேலும், ‘நான் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும் ஆராய்ச்சி ஸ்டெம் செல் ஆராய்ச்சி, அங்கு ஸ்டெம் செல்களில் கூடுதல் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் மீட்சியை துரிதப்படுத்த முடியுமா, வளர்ச்சியை துரிதப்படுத்த முடியுமா. காயத்தை சரிசெய்ய முடியுமா என்பதை ஆராய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.