சந்தையில் வாங்கிய கத்தியை வயிற்றில் குத்தி பார்த்த வாலிபர் படுகாயம்
1 min read
9.3.2020
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ளது சோலையார் தேயிலை எஸ்டேட். இதில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கோபால்பரத்(35), மற்றும் அவரது மனைவி சுஷ்மா ஆகியோர் தேயிலை பறிக்கும் தொழிலாளிகளாக கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். இவர்கள் அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றனர்.
8ம் தேதி (ஞாயிற்று கிழமை) வார விடுமுறையை முன்னிட்டு, வால்பாறை நகரில் நடநஙத வாரச்சந்தைக்கு கோபால்பரத், தனது நண்பர்களுடன் தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க மாலை 3 மணியளவில் வந்தார்.
வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாக சாலையோரத்தில் வீட்டு உபயோக இரும்பு சாமான்கள் கடை விரிக்கப்பட்டிருந்தது. அதில் கோபால்பரத் கத்தி ஒன்றை விலைக்கு வாங்குவதற்காக விலை பேசியுள்ளார். அப்போது அது சரியாக வேலை செய்கிறதா என்று சோதித்து பார்ப்பதற்காக தனது வயிற்றில் குத்திபார்த்துள்ளார். 2 முறை குத்திபார்த்தபின்னர், 3வது முறையாக அவர் வேகமாக குத்தி பார்த்தபோது, அது அவரது வயிற்றில் 6 இன்ச் அகலத்திற்கு கிழித்து கொண்டு ஆழமாக சென்றது. இதனால் வயிற்றில் படுகாயம் ஏற்பட்டு அதிலிருந்து ரத்தம் கொட்டியது.
இதனால் கோபால்பரத் மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் பதற்றத்திற்கு ஆளாகி வட மாநில தொழிலாளர்களுக்குள் சண்டை ஏற்பட்டு, கத்திக்குத்து நடந்ததாக வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், காயமடைந்த கோபால்பரத்தை, அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கோபால்பரத் அனுமதிக்கப்பட்டார்.
தகவலறிந்த வால்பாறை போலீசார், இரவு 7 மணியளவில் கோபால்பரத்தின் மனைவியை வரவழைத்து, விசாரித்தனர். கத்திக்குத்து சம்பவம் விளையாட்டாக நடந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் கோபால்பரத்தின் குடும்பத்தினர் புகார் எதுவும் கொடுக்க விரும்பாததால், இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்யவில்லை.
போலீசார் கூறுகையில், வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள தேயிலை தோட்டங்களில் மொத்தம் 18 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வட மாநில தொழிலாளர்கள். அவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில், அவர்களை மேற்பார்வையாளர்கள் கண்டிக்கும்போது, ‘கத்தியால் சொருகிட்டு, சொந்த ஊருக்கு போய்விடுவேன்’, என்று தொழிலாளர்கள் எச்சரித்து வருவதாக புகார் வருகிறது. அது போல் கோபால்பரத் முன் விரோதத்தில் உபயோகப்படுத்துவதற்காக கத்தி வாங்கினரா என்று விசாரித்தோம். இல்லையென்று தெரியவந்தது. மேலும் அவர் தனக்கு தானே குத்திக்கொண்டது, அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அதனால் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலைகளில் திறந்த வெளியில் விற்கப்படும் கத்தி போன்ற ஆயுதங்களால், யார் வேண்டுமானாலும், அவற்றை எடுத்து யார் மீதும் பிரயோகப்படுத்திவிடக்கூடாது, என்பதற்காக வெளிப்படையாக கத்தி போன்ற ஆயுதங்களை விற்கக்கூடாது, என்று சாலையோர வியாபாரிகளுக்கு தடை விதித்துள்ளோம்’ என்றனர்.