சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை தாக்கி கடத்தல்
1 min read
11.3.2020
ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது காதல் கொண்டனர். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து வைக்கும் தந்தைப் பெரியார் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியை செல்வன் நாடினார். அவர் உதவியுடன் கடந்த திங்களன்று சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பெரியார் படிப்பகத்தில் இளமதியை செல்வன் திருமணம் செய்து கொண்டார்.
அன்று இரவு 9 மணி அளவில் ஐந்துக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த 40க்கும் அதிகமானோர், திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி அவரை காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
வழி எங்கும் ஈஸ்வரனை துன்புறுத்தி புதுமணத்தம்பதியின் இருப்பிடத்தை கேட்டுள்ளனர். அப்போது உக்கம்பருத்திக்காடு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் புதுமணத்தம்பதி சென்றதை பார்த்த அந்த கும்பல், புதுமாப்பிள்ளையை தாக்கிவிட்டு மணமகள் இளமதியை காரில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றுள்ளனர்.
சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ள இந்த சம்பவத்தில், இளமதியும், செல்வன் மற்றும் ஈஸ்வரனும் தனித்தனி காரில் கடத்தப்பட்டது தெரியவந்தது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், கருங்கல்லூர் வழியாக வந்த ஆம்னிவேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, பெண்ணின் தந்தை ஜெகநாதன் ஆம்னி வேனில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மணமகன் செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரும் வைக்கப்பட்டிருந்த இடம் தெரியவந்தது. இதன் அடிப்படையில் இருவரையும் காவல்துறையினர் மீட்டனர்.
கடத்தப்பட்ட புதுமணப்பெண் இளமதியை மீட்க வலியுறுத்தியும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நள்ளிரவு கொளத்தூர் காவல்நிலையத்தை திராவிட விடுதலை கழகத்தினர் முற்றுகையிட்டனர். மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் காவல் நிலையத்தில் வலியுறுத்தப்பட்டது.