July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

எருக்கம்பால் கொடுத்து பெண் சிசு கொலை -தாய், பாட்டி கைது

1 min read
Seithi Saral featured Image
Grandmother and mother arrested for murdering baby girl

20.3.2020

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே, மொட்டனூத்து ஊராட்சியில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (34). மனைவி கவிதா (27). மகள்கள் பாண்டிமீனா (10), ஹரிணி (8). இருவரும் ஆண்டிபட்டி அருகே, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தங்களது பாட்டி வீட்டில் தங்கி, 4 மற்றும் 2வது படித்து வருகின்றனர். சுரேஷ் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

கவிதா மூன்றாவது முறையாக கர்ப்பமாகி பிரசவத்திற்காக கடந்த பிப். 20ல், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பிப். 26ம் தேதி இரவு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. 28ம் தேதி தாயும், சேயும் வீடு திரும்பியுள்ளனர். மார்ச் 2ம் தேதி கவிதா கோழிக்கறி, நிலக்கடலை சாப்பிட்டதாகவும், குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக கொடுத்து, அதனால் இறந்ததாகவும் தெரிவித்து, வீடு அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலம், சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் ஆண்டிபட்டி தாசில்தார் சந்திரசேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தாசில்தார் உத்தரவுப்படி மொட்டனூத்து விஏஓ தேவி, ராமநாதபுரம் கிராமத்துக்கு சென்று, கவிதா அவரது மாமியார் செல்லம்மாளிடம் விசாரணை நடத்தினார். இதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதுகுறித்து ராஜதானி போலீசில் விஏஓ புகார் அளித்தார்.

இதன்பேரில், இருவரையும் ராஜதானி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்து, ஆண்டிபட்டி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில், போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில், மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாது என, எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததாக கவிதாவும், அவரது மாமியாரும் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து ஆண்டிபட்டி தாசில்தார் முன்னிலையில், குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை கவிதா அடையாளம் காட்டினார். அந்த இடத்தில் தோண்டி, குழந்தையின் உடலை எடுத்து, அரசு மருத்துவர் கோகுல் சங்கரபாண்டியன் பிரேத பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து பெண் சிசுக்கொலை செய்த கவிதா, அவரது மாமியார் செல்லம்மாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எருக்கம்பால் கொடுத்து பெண் சிசு கொலை செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளநேரி மீனாட்சிபட்டியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக குழந்தையின் பெற்றொர் வைரமுருகன்-சௌமியா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு பெண் சிசு கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.