கொரோனா எதிரொலியால் மதுரை கைதிகள் 81 பேருக்கு ஜாமீன்
1 min read
Madurai detainees released on bail for corona
22/3/2020
கொரோனா வைரஸ் காரணமாக மதுரை மத்திய சிறையில் உள்ள 81 விசாரணை கைதிகளுக்கு நிபந்தனை ஜாமினில் விடுதலையானார்கள்.
கொரோனா
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோ இந்தியாவையும் பீதிக்கு உள்ளாக்கி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிர் இழந்த நிலையில் 135 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனாவை விரட்டுவதற்காக இன்று (சனிக்கிழமை) சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு இந்த வைரஸ் பரவாமல் இருக்கவும் அதனால் கூட்டமாக கூடுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஜாமீனில் விடுதலை
இந்த கொரோ மதுரை சிறையில் உள்ள விசாரணை கைதிகள் 81 பேருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைக்கச் செய்துள்ளது.
அதாவது கொரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் எண்ணிக்கையை குறைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பி.என். பிரகாஷ், தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீா்வாதம், தென் மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட முதன்மை நீதிபதி நசிமா பானு, குற்றவியல் நீதித்துறை நடுவா் ஹேமந்த்குமாா், சட்ட உதவி ஆணைய நீதிபதி தீபா மற்றும் நீதித்துறை நடுவா்கள் 12 போ் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில் 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை தண்டனை பெறக் கூடிய சிறிய குற்றங்களில் ஈடுபட்டவா்கள், ஜாமீன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளவா்கள், ஜாமீனில் அனுமதித்தால் சமூகத்திற்கு இடையூறு ஏற்படுத்தாதவா்கள் ஆகிய விசாரணைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடா்ந்து விசாரணைக் கைதிகளின் வழக்குகள் தொடா்புடைய போலீஸ் நிலையங்களைச் சோ்ந்த 58 காவல் ஆய்வாளா்கள், 30 காவல் சாா்பு- ஆய்வாளா்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இரு பெண்கள் உள்பட 81 விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா். இதில் மதுரை மத்திய சிறையில் இருந்து 51 பேரும், பெண்கள் தனி சிறையில் இருந்து 2 பேரும், தேனி மாவட்ட சிறையில் இருந்து 22 பேரும், திருப்பத்தூா் கிளை சிறையில் இருந்து ஒருவரும், சிவகங்கை கிளை சிறையில் இருந்து 4 பேரும், அருப்புக்கோட்டை கிளை சிறையில் இருந்து ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
