பயிரைக் காக்க போட்ட மின்வேலியில் சிக்கி 2பேர் பலி -சடலங்கள் போலீசுக்கு தெரியாமல் புதைப்பு
1 min read
பயிரைக் காக்க போட்ட மின்வேலி… உயிரை வாங்கிய சோகம்
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே எள் வயலுக்கு போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இறந்த 2 இளைஞர்களை வாய்க்காலிலேயே குழி தோண்டி புதைத்த நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை, சுபாஷ் ஆகியோர் கடந்த 28ஆம் தேதி இரவு முயல் வேட்டைக்காகச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.
பல இடங்களிலும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகாரளித்தனர்.
தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கிய போலீசார், இருவரது செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர்.
அவர்கள் காணாமல் போன அன்று அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற இளைஞனும் இருவரோடு சேர்ந்து சுற்றியது தெரியவந்தது.
கோகுல்ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவத்தன்று 3 பேரும் பில்ராம்பட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்காகச் சென்றது தெரியவந்தது.
அங்கு கிருஷ்ணமூர்த்தி என்பவரது எள் வயலில் சட்டவிரோதமாகப் போடப்பட்டிருந்த மின் வேலியில் சுபாஷ் சிக்கியுள்ளார்.
அவரைக் காப்பாற்றச் சென்ற அண்ணாமலையும் மின்சாரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைப் பார்த்த கோகுல்ராஜ், பயத்தில் செய்வதறியாது அங்கிருந்து ஓடி வந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
வீட்டுக்கு வந்தபின்னும் இதுகுறித்து யாருக்கும் சொல்லாத அவர், மறுநாள் காலையில் தான் மட்டும் சென்று பார்த்ததாகவும் அப்போது அங்கு இருவரது சடலங்களும் இல்லை என்றும் அதனால் மேலும் பயந்து அங்கிருந்து சத்தமில்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் போலீசாரிடம் கூறியிருக்கிறார் கோகுல்ராஜ்.
இதனையடுத்து நிலத்தின் உரிமையாளரான கிருஷ்ணமூர்த்தியிடம் போலீசார் விசாரித்தபோது, இருவரது உடல்களையும் தனது வயலிலேயே குழி தோண்டி அவர் புதைத்தது தெரியவந்தது.
சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணமூர்த்தியையும் கோகுல்ராஜையும் போலீசார் கைது செய்தனர்.
பயிர்களை காப்பாற்றுவதாக நினைத்து கிருஷ்ணமூர்த்தி போட்ட மின்வேலி, 2 மனித உயிர்களை காவு வாங்கி அவரை சட்டத்தின் வேலிக்குள் சிக்க வைத்துள்ளது.
இதுபோன்று மின் வேலிகள் போடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்பதோடு, அதனை அமைப்பவர்களுக்கே கூட ஆபத்தாய் முடியும் என்பதையும் உணர வேண்டும் என்கின்றனர் மின் வாரியத்தினர்.