இந்தியாவின் ஏற்றுமதி 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்தது
1 min read
17.4.2020
கொரோனா வைரஸ் தாக்கத்தால், இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக நாடுகள் அனைத்திலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி என்பது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, நம்முடைய ஏற்றுமதி கடந்த 1991ம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 35 சதவிதம் அளவிற்கு குறைந்துள்ளது.2009ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவின் போது கூட, அதிகபட்சமாக 34 சதவிதம் தான் ஏற்றுமதி குறைந்தது.
தற்போது கடந்த மார்ச் மாதம் இந்தியா செய்த ஏற்றுமதி ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடியாக குறைந்து 1991-க்கு பின் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.அதேபோல். இறக்குமதியும், சுமார் 29 சதவிதம் குறைந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக உள்ள நிலையில், சரக்குகளின் வரத்து குறைவு, போக்குவரத்து குறைவு, பொருட்களை மக்கள் வாங்குவது குறைந்துள்ள நிலையில், இறக்குமதி 2 லட்சத்து 34 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.
செய்யப்பட்ட ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டது, தற்போது பொருட்கள் வேண்டாம் என்று ஆடர்களை தள்ளி வைத்தது போன்றவற்றால், எலக்ட்ரானிக் பொருட்கள், மெஷின்கள் மற்றும் ரசாயனங்களின் இறக்குமதி பன்மடங்கு குறைந்துள்ளன.2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்தது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, 2020 மார்ச் மாதம் இது 2 லட்சத்து 34 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.அதேபோல், 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியா சுமார் ஒரு லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்த நிலையில், 2020 மார்ச் மாதம் இது ஒரு லட்சத்து 60 கோடியாக குறைந்துள்ளது.
இந்த சரிவு காரணமாக, 2018-19 ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சுமார் 25 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2019-20ம் ஆண்டில் இது 23 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.இந்தியாவை பொறுத்தவரை அதிகம் இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களில், முக்கியமானவை, கச்சா எண்ணெய்யும், தங்கமும் தான்.
இந்நிலையில் மார்ச் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 15 சதவிதம் குறைந்துள்ளது. அதேபோல், தங்கத்தின் இறக்குமதி 64 சதவிதம் குறைந்துள்ளது. ஊரடங்கு காரணமாக தங்கத்தை யாரும் வாங்காத நிலையில், அதன் விலை அதிகரித்திருப்பதற்கு, இறக்குமதி சரிவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.