May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்க முடியாதது ஏன்?

1 min read
Why can’t Corona find a vaccine?

உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற மருத்துவர் மணி கொரோனா வைரஸ் கிருமி பற்றி விளக்கமளித்துள்ளார். இவர் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கும்பகோணம் அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது? என்பது பற்றி அவரிடம் கேட்டதற்கு ‘கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை பதிவிடுகின்றேன்’ என கூறியுள்ளார். அதனை பார்ப்போம்…

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் .

ஒரு ஆர்என்ஏ (நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ் (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்). அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ்.

இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்வதே.இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே. கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம். இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. இது ஒரு முழுமையான
ஒட்டுண்ணி. ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த
செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை.

செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.இந்த வைரஸ் மூக்கு, வாய்
அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில்
தொண்டை பகுதியை தாக்குகிறது. தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது.

இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system)உடனே மோதலை தொடங்குகிறது. அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். பெரும்பாலான வைரஸ்கள்
அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.

இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை
நமது உடல் கொன்று விடுகிறது, கொரோனா வைரஸ் உள்பட.

நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். வைரஸோ, பாக்டீரியாவோ அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணுயிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணுயிரின் உருவம்.இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ
உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். அதில் ஒன்று Innate lymphoid cells.

இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. இது தான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள்.இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி ஒரு பக்கம் இருக்க, ண்டைப்பகுதியை
அடைந்த கொரோனா வைரஸ்கள் அடுத்ததாக நமது உடலை பாதிப்பது நுரையீரலை.நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும்.

இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். இந்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து,பல்கிப் பெருகும்.10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.

இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. ழ

இந்த கொரோனா வைரஸ், நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான்.

ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும்.

இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு
எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை.இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை.

அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன,அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, B cells-களும் ஏற்கனவே
கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும்
பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது.

உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில்
நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது.

அதே போல இதயக் கோளாறு, பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும்
போதிய சக்தி கிடைப்பதில்லை, நோய் எதிர்ப்பு சக்தி உள்பட.

ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. இங்கேயும் உடலின் எதிர்ப்பு சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி.கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? என்பது தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.

ஆனால், கொரோனா மாதிரி எச்ஐவி வைரஸ் மூலம் இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.

அதற்குத் தான் வீட்டிலேயே முடங்க சொல்கிறார்கள்.இன்னும் மருந்து கண்டுபிடிக்க இயலாத நிலையில், இந்த நோயில்
இருந்து தப்பிப்பதே உசிதம்.இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

தனித்திருப்போம்!விழிப்புடன் இருப்போம்!!வீட்டிலேயே இருப்போம்!!!கொரோனாவை ஒழிப்போம்!!!!

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.