தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா
1 min read
Coronation for 66 more people in Tamil Nadu
25/4/2020
தமிழகத்தில் மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா என்ற கொலை நோய் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 43 பேர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 495 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சீபுரத்தில் 7 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், விருதுநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனாவால் 1,821 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில்…
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56 பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறவித்து உள்ளது. இவர்களுடன் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 779 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 1490 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 24,942 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 18,953 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடம் பெற்று இருப்பது மராட்டிய மாநிலம். அந்த மாநிலத்தில் 6,817 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாநிலத்தில் 96 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயின்
உலக நாடுகளில் அமெரிக்கா, இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் தான் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 378 பேர் இறந்தள்ளனர். அந்த நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 22,902 பேர் பலியாகியுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 813 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். அங்கு இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,319 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்தில் 4,913 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 377 பாதிக்கப்பட்டு உள்ளனர்.