தீவைத்து எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
1 min read
சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
அமைச்சர் சண்முகம் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீ. கடந்த இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்லப்பட்டார். இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் முருகையன், கலியபெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். குடும்ப முன்பகை காரணமாக நிகழ்ந்துள்ள இச்சம்பவம் தமிழகத்தையே அதிர செய்துள்ளது. இச்சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ‘உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அரசு அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நிதியை நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
சிறுமியின் பெற்றோரிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கியபோது, அவர்கள் கதறிஅழுதனர். அப்போது, அமைச்சர் சண்முகம் அவர்களுக்கு ஆறுதல்கூறி, குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார். அப்போது, ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாபிசிங், எஸ்பி ஜெயக்குமார், குமரகுரு எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
விசிக ரூ.1 லட்சம் நிவாரணம்: இதனிடையே, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த சிறுமியின் பெற்றோரிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரவிக்குமார் எம்பி ரூ.1 லட்சம் ரொக்கத்தை நிவாரண நிதியாக வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களை உச்சபட்ச தண்டனையாக மரண தண்டணை விதிக்க வேண்டும் என்றார். முன்னதாக நிவாரண நிதிவழங்கும்போது, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறுமியின் பெற்றோர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசி ஆறுதல் கூறினார்.