புளியங்குடியில் தொழிலாளி அடித்துக் கொலை
1 min read
2.6.2020
தென்காசி மாவட்டம் புளியங்குடி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் வைரவன் (45). கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் புளியங்குடி இலந்தைகுளத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் கீழ் நண்பர்கள் பேச்சிமுத்து, செல்லத்துரை, பாலு ஆகியோருடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பெரிய முனியாண்டி மகன் முருகன் (37) என்பவர் போதையில் அங்கு வந்தார். சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 4 பேரிடமும் தன்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்ளும்படி கூறினார்.
வைரவன் அவரை சேர்த்துக்கொள்ள மறுத்தார். மற்றவர்கள் மவுனமாக இருந்தனர். இதனால் வைரவனுக்கும், முருகனுக்கும் கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே வைரவனும், முருகனும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அப்போது அங்கு கிடந்த கம்பால் வைரவனின் பின்தலையில் முருகன் சரமாரியாக அடித்தார். இதில் அந்த இடத்திலேயே வைரவன் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அவருடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பேச்சிமுத்து, செல்லத்துரை, பாலு ஆகிய 3 பேரும் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு வைரவன் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைரவன் பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட வைரவனுக்கு பூங்கனி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
இதுகுறித்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார். சீட்டு விளையாட்டு தகராறில் கூலி தொழிலாளி வைரவன் கொலை செய்யப்பட்டது, புளியங்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.