சேலம் – சென்னை சாலை வழக்கு விரைவாக விசாரிக்க கோரி மத்திய அரசு மனு
1 min read
Salem - Chennai 8 way Road Case-cetral govt. Petition
5-5-2020
சேலம் – சென்னை, எட்டு வழி சாலை திட்டத்துக்கு தடை விதித்த, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விரைவாக விசாரிக்கும்படி, மத்திய அரசு சார்பில், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எட்டு வழிச்சாலை
சேலம் – சென்னை இடையே, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், புதிதாக எட்டு வழி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கின. அதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், சாலை அமைப்பதற்காக, நிலம் கையகப்படுத்துவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி, மத்திய அரசு சார்பில், நேற்று சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாதிப்பு
தேசிய நெடுஞ்சாலை ஆணைய சட்டத்தின், 3 ஏ – 1- பிரிவை, சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவை மீறி சாலை பணிகளை தொடர முடியாது. மக்கள் நலன் கருதியே, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.தற்போது இதை ரத்து செய்துள்ளதால், இதுபோன்ற மற்ற வழக்குகளுக்கும், பின்னடைவு ஏற்படும். அரசின் கொள்கை ரீதியிலான முடிவுகளுக்கும் சிக்கல் ஏற்படும். எனவே, சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு குறித்த வழக்கை விரைவாக விசாரித்து, அதற்கு தடை விதிக்க வேண்டும். சாலை அமைக்கும் பணிகளை தொடங்கவில்லை எனில், நாட்டின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதுடன், மக்கள் நலனுக்கும் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
