கொரோனா நோயாளி பற்றி வரதராஜன் குற்றச்சாட்டும் அமைச்சர் பதிலும்
1 min read
Varadarajan alleges of coroner patient and minister vijayabasker's answer
8-6-2020
செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரது நண்பர்பற்றி சொல்லும் போது ஆஸ்பத்திரிகள் பற்றி சொன்ன குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ளார்.
விஜயபாஸ்கர் வீடியோ
டெலிவிஷன் செய்தி வாசிப்பாளரும் டெலிவிஷன் நடிகருமான வரதராஜன் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தார். அதில் அவரது குடும்ப நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்ததாவும் திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் பேசி இருந்தார். அவருக்கு டெஸ்ட் எடுத்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததாம். அதன்பின் வரதராஜன் தனக்கு தெரிந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறினாராம். அதற்கு சென்னையில் உள்ள தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் இங்கு அழைத்து வர வேண்டாம் என்றும் பெட் வசதி இல்லை என்றும் சிகிச்சை அளிக்க வசதி இல்லை என்றும் கூறினார்களாம். செயலாளர் பதிவியில் இருக்கும் அதிகாரிகள், ஆஸ்பத்திரி சேர்மன் போன்றோரிடம் பேசியும் அவர்கள் தங்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் கூறினார்களாம். அழைத்து வந்து என்ன செய்வீர்கள் என்று சொன்னார்களாம்.
இப்படி கண்ணீர் மல்க கூறிய வரதராஜன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார். யாரும் அனாவசியமாக வெளியே வரவேண்டாம் என்றும் விளக்கி உள்ளார்.
இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமைச்சர் மறுப்பு
விரதராஜனின் இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவரும் அமைச்சர் ஜெயக்குமாரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது நிருபர்கள், வரதராஜன் குற்றச்சாட்டுப் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் வேண்டும் என்றே சிலர் விமர்சனம் செய்கின்றனர். .
அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை தட்டுப்பாடு இல்லை. படுக்கை தட்டுப்பாடு இருப்பதாக வரதராஜன் கூறியது தவறான தகவல். நாங்கள் எடுக்கும் நடவடிக்கை மீது விமர்சனம் செய்வதை தவிர்க்கவும்.
வரதராஜன் எந்த ஆஸ்பத்திரிகளுடம் தொடர்பு கொண்டார், யாரையெல்லாம் பார்த்தார் என்பதை சொல்ல வேண்டும். அப்படி அவர் தெரிவிக்கும்பட்சத்தில் நான் நேரில் சென்று விசாரிக்கத் தயார். அரசு நிலை குறித்து தவறான தகவல் பரப்பாதீர்கள்.
நடவடிக்கை
சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில், தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளில் போதுமான படுக்கைகள் உள்ளன. படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் அனைத்து வசதிகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும்படி கூறி வருகிறோம்.
வரதராஜனை அழைத்துச் சென்று, டாக்டர், சுகாதார பணியாளர்கள் செய்துவரும் பணியை காட்ட தயார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு கடும் நெருக்கடியான சூழலில் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர். ஆதாரம் இல்லாத எந்த தகவலையும் பரப்ப வேண்டாம். கண்ணுக்கு தெரியாத வைரசை எதிர்த்து போராடும் நிலையில் விமர்சனங்கள் வேண்டாம்.
அரசு பற்றி வதந்தி பரப்பினால், அரசு வேடிக்கை பார்க்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வரதராஜன் மீது பெருந்தொற்று நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
வரதராஜன் விளக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கரின் பேட்டிக்கு பின் வரதராஜன் வரதராஜன் வெளியிட்ட வீடியோவில் தன்னிலை விளக்கம் அளித்துளாா. அதில், “நான் அரசு குறித்து குறைகூறும் நோக்கத்தில் எதையும் செய்யவில்லை. எனது நண்பருக்கு அனுப்பிய வீடியோவை யாரோ சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். எனக்கு அரசு மீது குற்றம் சொல்லும் எண்ணம் இல்லை.” என்று கூறியுள்ளார்.