இந்தியாவில் ஒரே நாளில் 9985 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 9985 overnight in India
10-6-2020
இந்தியாவில் ஒரே நாளில் 9985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பரவல்
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் இதன் பரவல் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
கொரோனா நிலவரம் பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்கம் தகவலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று(புதன்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது ஒரே நாளில் இந்தியாவில் 9985 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,76,583 ஆக உயர்ந்துள்ளது.
279 பேர் சாவு
கொரோனாவால் ஒரே நாளில் 279 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7745 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.
குணம் அடைந்தோர்
இதுவரை 135206 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 48.8 சதவீதமாக உள்ளது. நேற்று மட்டும் 5991 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 133632 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 90,787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் 34914 பேருக்கும், டெல்லியில் 31309 பேருக்கும், குஜராத்தில் 21014 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.