காற்றின் மூலமும் கொரோனா பரவும் -விஞ்ஞானிகள் எச்சரிக்கை
1 min read
காற்றின் வழி பரவக் கூடியது கொரோனா: 239 விஞ்ஞானிகள் கூட்டாக தகவல்..
Wind source and corona spread -Scientists warnகொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என, 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளதோடு, அதற்கேற்ப விதிமுறைகளை மாற்றக் கோரியுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் உள்ளிட்டவற்றின் மூலமும், போதிய இடைவெளி இன்றி பேசும்போதும் திவலைகள் தெறித்து அதன் வழியாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதே, உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாடு.
கொரோனா காற்றின் வழியாகப் பரவக் கூடிய சாத்தியங்கள் இருந்தாலும், அதற்கு ஏதும் ஆதாரங்கள் இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், காற்றின் வழியாகப் பரவக் கூடிய சிறிய துளிகளில் வைரஸ் இருந்தால், அதை வேறொருவர் சுவாசிக்க நேர்ந்தால் கொரோனா தொற்றக் கூடும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருமல், தும்மல் வழியாக தெறித்து பெரிய திவலைகளாக காற்றில் பரவினாலோ அல்லது சராசரியாக ஒரு அறையின் நீளம் அளவிற்கு பரவிச் செல்லக் கூடிய சிறிய துளியாக இருந்தாலும், கொரோனா வைரஸ் இருந்தால் அதை காற்றின் வழி சுவாசிப்பவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தக் கூடும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என்று குறிப்பிட்டு, அதற்கேற்ப விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் காற்றின் வழி பரவக் கூடியது என்பது, போதிய காற்றோட்டம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் ஆட்கள் கூடும் இடங்கள், கட்டுப்பாட்டு பகுதிகள் விஷயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
உள்ளரங்குகளில் இருக்கும்போதும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும்போதும் மாஸ்க் அணிவது முக்கியத்துவம் பெறும். சிறிய துளியையும் வடிகட்டக் கூடிய என்95 மாஸ்க்குகளை சுகாதாரப் பணியாளர்கள் அணிய வேண்டியதிருக்கும்.
கல்வி நிலையங்கள், நர்சிங் ஹோம்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில் காற்றோட்டத்தை அதிகப்படுத்த வேண்டியிருக்கும், அதற்கேற்ப காற்று வடிகட்டிகளை பயன்படுத்த வேண்டியிருக்கும், அறைகளுக்குள் கிருமிகளை கொல்ல புறஊதாக் கதிர்களை பயன்படுத்த வேண்டியிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.