July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் ரூ.261 கோடி திட்டப் பணி -முதல்வர் அடிக்கல் நாட்டினார்

1 min read

7.8.2020

261 crore project work in Nellai – Chief Minister laid the foundation stone

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நெல்லை வந்தார். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.261 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நெல்லை தாமிரபரணி மாற்றுப்பாலம், நெல்லை சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். தொடர்ந்து கலெக்டர், எஸ்பிக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக 2 நாள் சுற்றுப் பயணத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று துவக்கினார். இதற்காக சேலத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் மாலையில் மதுரையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நேற்று இரவு மதுரையில் தங்கினார்.

இன்று காலை 7.30 மணிக்கு மதுரையில் இருந்து கார் மூலம் புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 9.45 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்தார். நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் தரை தளத்தில் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் கட்டப்பட்ட தாமிரபரணி மாற்றுப் பாலத்தையும், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நெல்லை சப்-கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ரூ.32.30 கோடி மதிப்பில் ஏற்கனவே நிறைவு பெற்ற 20 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.208.30 கோடி மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.20 கோடி மதிப்பில் 2 ஆயிரத்து 800 பயனாளிகளுக்கு அரச நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மட்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.260.60 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக 2வது தளத்தில் நெல்லை, தென்காசி மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், மருத்துவத் துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முதல் தளத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், சுய உதவிக்குழுவினர் உடன் முதல்வர் கலந்துரையாடினார். நிகழ்ச்சிக்கு நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலை வகித்தார்.

முதல்வருடன் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காரில் சேலம் புறப்பட்டு செல்கிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கலெக்டர் அலுவலகம் வர்ணம் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு கலெக்டர் அலுவலகம் ஜொலிக்கிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்தது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.