இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சே வெற்றி
1 min read
Mahinda Rajapaksa wins Sri Lankan parliamentary election
7-8-2020
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மாபெரும் வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் ஆகிறார்.
மகிந்த ராஜபக்சே
இலங்கையில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. ஆனால், அவரது சொந்த கட்சியில் எழுந்த எதிர்ப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றால் பதவியில் இருந்து விலகினார்.
அதன்பின், கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். பின்பு தனது சகோதரரான மகிந்தாவை பிரதமராக்கினார். ஆனால், அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள பெரும்பான்மை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தேர்தல்
எனினும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல், கடைசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இலங்கை பாராளுமன்றத்திற்கு மொத்தம் 225 இடங்கள். இதில் 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மீதி 29 இடங்கள், கட்சிகள் பெறுகிற வாக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும். மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 75 சதவீதத்தினர் வாக்களித்தனர்.
வெற்றி
தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளிவர தொடங்கின. இதில், நேற்றிரவு வரை ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா) கட்சி( எஸ்.எல்.பி.பி. ) முன்னிலையில் இருந்தது. இறுதியில் ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி, 3ல் 2 பங்கு இடங்களில் வெற்றியடைந்தது.
சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
நுவரெலியாவில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் வெற்றி பெற்றுள்ளார்.
மீண்டும் பிரதமர்
இந்த தேர்தல் மூலம் மகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆகிறார்.
பிரதமர் மோடி, மகிந்தா ராஜபக்சேவை தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மகிந்தா ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதனை எதிர்நோக்கி உள்ளேன். இரு நாடுகளும் நட்புடனும், நல்லுறவுடனும் இருக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சஜித் பிரேமதாசா புதிதாக தொடங்கிய ஐக்கிய மக்கள் சக்தி, 23.3 சதவீத ஓட்டுக்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, 3.84 சதவீத ஓட்டுக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 2.15 சதவீத ஓட்டுகளும் பெற்றுள்ளன.