June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆந்திராவில் சோகம் -ஓட்டலில் தீ, கொரோனா நோயாளிகள் 11பேர் பலி

1 min read

9.8.2020

Tragedy in Andhra Pradesh – Hotel fire kills 11 corona patients

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனிமை வார்டாக மாற்றப்பட்ட ஸ்டார் ஓட்டலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெண் நோயாளிகள் உள்பட 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உச்சத்தை அடைந்து வருகிறது. நேற்று வரை மொத்தம் 2.17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக தினசரி 10 ஆயிரம் ேபருக்கு தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனிமை முகாம்கள் நிரம்பி வருகின்றன. இதேபோல் தனியார் மருத்துவமனைகளும் நிரம்பிவிட்டதால் அரசு வழிகாட்டுதல்படி ஓட்டல்களை வாடகைக்கு எடுத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், அதேபகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றை வாடகைக்கு எடுத்து கொரோனா வார்டாக மாற்றி சிகிச்சை அளித்து வருகிறது. இந்த ஓட்டலில் சுமார் 40 நோயாளிகளும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் என 10 பேரும் இரவு பகலாக பணியில் உள்ளனர்.

இன்று அதிகாலை அந்த ஓட்டலின் முதல் தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பற்றி மளமளவென முதல் தளம் முழுவதும் கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட கொரோனா நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்து வெளியேற முயன்றனர். ஆனால் புகை சூழ்ந்து கொண்டதால் மூச்சு திணறல் ஏற்பட்டு நோயாளிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். மேலும் பலர் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றனர்.

அப்போது அவ்வழியாக வாக்கிங் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் விஜயவாடா போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். தகவலறிந்து காவல்துறை ஆணையர் பத்ரிஸ்ரீனிவாஸ் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்ட இடம் கொரோனா வார்டு என்பதால் அதற்குள் சென்று மீட்பு பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கவச உடை கொண்டுவரப்பட்டு அவற்றை அணிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பயங்கர தீ விபத்தில் பெண்கள் உட்பட 11கொரோனா நோயாளிகள் உடல் கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் ஆபத்தான நிலையிலும், மற்றவர்கள் பத்திரமாகவும் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சம்பவத்தை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் ஓட்டல் மற்றும் மருத்துவமனை எதிரே கதறிஅழுதபடி திரண்டனர். ஆனால் அவர்கள் யாரையும் அருகில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மருத்துவமனை என்றால் சுற்றிலும் காற்றோட்டமான பகுதியாக இருக்கும். சில விதிமுறைகளும் கடைபிடிக்கப்படும். ஆனால் தீ விபத்து நடந்த நட்சத்திர ஓட்டலின் நிலைமை அவ்வாறு இல்லை. இதனால் தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக தப்ப முடியாமல் புகையில் சிக்கி நோயாளிகள் இறந்துள்ளனர்’ என தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து சம்பவம் காரணமாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனிமை முகாம்களையும் உடனடியாக கண்காணித்து உரிய பாதுகாப்பு முன்னேற்பாடு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்த நிலையில் தற்போது ஆந்திராவிலும் தீ விபத்தில் 9 பேர் இறந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.