சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை
1 min read
9.8.2020
சபரிமலையில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். நாட்டில் விவசாயம் செழித்து, மக்களின் வறுமை நீங்க வேண்டும் என்பதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் இந்தாண்டு நிறைபுத்தரிசி பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிறைபுத்தரிசி பூஜைகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. அதனை தொடர்ந்து தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வழக்கமான பூஜைகள் நடந்தன. இரவு 7.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இன்றைய நிறைபுத்தரிசி பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் வீடு செங்கனூரில் உள்ளது. அங்கிருந்து நேற்று காலை காரில் சபரிமலைக்கு புறப்பட்டார். கனமழையால் வரும் வழியில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்தது. இதனை கடந்து பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவர் பம்பைக்கு சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் பம்பைக்கு சுமார் 12 கிலோ. மீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டு ரோடு முழுவதும் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து தந்திரி நடந்தே பம்பை வர தீர்மானித்தனர். இதனிடையே தகவல் அறிந்த பம்பை போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தொடர்ந்து போலீசார், வாகனத்தில் தந்திரியை பத்திரமாக அழைத்து பம்பை வந்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு இதைபோல நிறைபுத்தரிசி பூஜைக்கு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் செல்லும்போதும் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து தந்திரி சன்னிதானம் செல்ல முடியாத நிலையில் தவித்தார். அதன்பின்னர் புலிமேடு வழியாக நடந்தே சென்று சன்னிதானம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.