தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
1 min read
100 percent pass in SSLC exam in Tamil Nadu
10-8-2020
தமிழகத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி.
கொரோனா ஊரடங்களால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. நடத்தப்படாத இறுதி தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. ஆனால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டித்ததால் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த முடியாமல் போனது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், வருகைப்பதிவேட்டின் அடிப்படையிலும் மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது.
100 சதவீதம் தேர்ச்சி
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டது. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு(எஸ்.எஸ்.எல்.சி.) தேர்வுக்கு பதிவு செய்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் 9,39,829 பேர் தேர்ச்சி என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் 4,71,759, மாணவிகள் 4,68,070 தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் 6,235 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம்
தமிழகத்திலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 52,741 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் 50,916 பேரும், சென்னை மாவட்டத்தில் 49,235 பேரும், திருவள்ளூர் 48,950 பேரும்,
விழுப்புரம் மாவட்டத்தில் 46,494 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகி உள்ள நிலையில் தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் மாணவ-மாணவிகள் தங்களுடைய மதிப்பெண் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தங்களுடைய உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. அதில் பார்த்தும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
மதிப்பெண் பட்டியல்
அதேபோல், மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இன்று காலை 10 மணியில் இருந்து பதிவிறக்கம் செய்து, வைத்துக்கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அந்தந்த பள்ளிகளில் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துவருகிறது.
மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25ந்தேதி வரை www.dge.tn.gov.in-ல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.