கோவில்பட்டியில் ரூ.4 கோடி பரிசு விழுந்திருப்பதாக கூறி தொழிலாளியிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல்
1 min read
11.8.2020
The mob that tried to extort money from the workerகோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் கணேஷ்குமார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் சங்கர்ராஜ் என்பவர் பணியாற்றுகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ரூ.4 கோடி பரிசு விழுந்து இருப்பதாக குறுந்தகவல் வந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் ஒரு நபர், சங்கர்ராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு, பிரிட்டீஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது செல்போன் எண்ணிற்கு ரூ.4 கோடி பரிசு விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது செல்போனில் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு ரூ.4 கோடி பரிசு விழுந்துள்ளதற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இந்த பணத்தை பெறுவதற்கு ரூ.16 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்கான விதிமுறைகள் குறித்து சிறிது நேரத்தில் ரிசர்வ் வங்கியில் இருந்து அழைப்பார்கள் என கூறியுள்ளார்.
அதன்படியே மற்றொரு நபர் சங்கர்ராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு 16 ஆயிரம் ரூபாயை ஸ்டேட் வங்கி கணக்கு ஒன்றுக்கு அனுப்பும்படியும், அனுப்பியவுடன் ரிசர்வ் வங்கி பெயர் கொண்ட இமெயிலுக்கு அதன் விபரத்தை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக செல்போன் அழைப்பு வந்ததால் குழப்பம் அடைந்த சங்கர்ராஜ், ஓட்டல் உரிமையாளர் கணேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பணத்தை எப்போது செலுத்துவீர்கள் என சங்கர்ராஜ் செல்போனுக்கு அடிக்கடி அழைப்பு வந்துள்ளது. அவர்களுடன் கணேஷ்குமாரும் பேசியுள்ளார். அடிக்கடி பேசியதால் சந்தேகம் அடைந்த கணேஷ்குமார், அது போலி என கண்டுபிடித்துள்ளார்.
மேலும் தனது பணியாளர் சங்கர்ராஜிடம் பணம் எதுவும் செலுத்தவேண்டாம் என கூறியுள்ளார். சங்கர்ராஜ் தனது நகையை அடகு வைத்து பணத்தை செலுத்த தயாராக இருந்த நிலையில் ஓட்டல் உரிமையாளர் கூறியதையடுத்து தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
இருந்தாலும் சங்கர்ராஜ் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்பு அவர்களிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அவர்களிடம் பேசிய கணேஷ்குமார், ரூ.4 கோடி பரிசு விழுந்து இருப்பதால், அதில் ரூ.16 ஆயிரத்தை கழித்து விட்டு மீதி பணத்தை தரலாமே என கூறியுள்ளார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். பணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். வாட்ஸ்அப் நம்பர் கொடுங்கள் என கேட்டதற்கு மறுத்துள்ளனர்.
அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் பணம் செலுத்தி விட்டதாக கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் கூறியதை பொய் என கண்டுபிடித்த அவர்கள் திட்டிவிட்டு செல்போனை துண்டித்துள்ளனர்.
இதுகுறித்து கணேஷ்குமார் கோவில்பட்டி ஸ்டேட் வங்கி மேலாளரை சந்தித்து தெரிவித்துள்ளார். அதற்கு வங்கி மேலாளர், ரிசர்வ் வங்கியில் இது போன்று எந்த நடைமுறையும் கிடையாது என்றும், அவர்கள் கொடுத்தது டெல்லியில் உள்ள ஒரு பெண்ணுடைய கணக்கு என்றும் கூறியுள்ளார். மேலும் சைபர் க்ரைமில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினார்.