“ஒவ்வொருவருக்கும் சுகாதார அட்டை”- சுதந்திர தினவிழாவில் மோடி பேச்சு
1 min read
“Health card for everyone” – Modi’s speech on Independence Day
15-8-2020
நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும் என்று சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி பேசினார்.
சுதந்திர தினவிழா
நாட்டின் 74 வது சுதந்திர தினம் இன்று ( சனிக்கிழமை) கொண்டாடப்பட்டது. கொரோனா ஊரடங்க காரணமாக, இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. டெல்லியின் மந்திரிகள் , வி.ஐ.பி.,க்கள் என 4 ஆயிரம் பேர் சமூக இடைவெளியை பின்பற்றி, பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் 7 வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் குழந்தைகளை காண முடியவில்லை. நாட்டில் பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் போர்க் களமாக உள்ளது.
நாம் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த தருணத்தில் கொரோனா முன்கள பணியாளர்களை நினைவு கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராடும் பணியாளர்களுக்கு நன்றி.கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெல்வோம். போராட்டத்தில் இருந்து கற்று கொண்ட பாடங்களை மறந்துவிடக்கூடாது
பன்முகத்தன்மையே நமது நாட்டின் பலம். இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்.நாட்டின் 75வது சுதந்திர தின விழா மிக பிரமாண்டமாக இருக்கும் நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம்.
வேலை வாய்ப்பு
தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தில், 7 ஆயிரம் திட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. விண்வெளித்துறையை திறந்து விட்டதன் மூலம், இளைஞர்களுக்கு வேலைவவாய்ப்பு கிடைக்கும். கடந்த 6 ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், காஸ் சிலிண்டர், ஏழைகளுக்கு வங்கிக்கணக்கு, கழிப்பறைகள் கட்டி கொடுத்தல் ஆகியவை நடந்துள்ளன.
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் தெற்கு ஆசியாவை சேர்ந்தவர்கள். இதன் மூலம் நாம் பல வாய்ப்புகளை உருவாக்கலாம். இந்த நாட்டின் தலைவர்களுக்கு, அமைதியை பராமரிப்பதில் முக்கிய பங்கு உள்ளது. இன்று அண்டை நாடுகளுடன் எல்லைகளை மட்டும் பகிரவில்லை. இரு நாட்டு மக்களின் மனங்கள் இணைந்து, உறவில் சமூக நல்லிணக்கம் நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, அண்டை நாடுகளுடன் இந்தியா, தனது உறவை பலப்படுத்தியுள்ளது.
உள்ளூர் பொருட்களுக்கு குரல் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும். இதனை நாம் செய்யாவிட்டால், நமது தயாரிப்புகளுக்கு வாய்ப்பு கிடைக்காது. இன்று பெரிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி திரும்பியுள்ளன. நாம், உலகத்திற்காக மேக் இன் இந்தியா என்ற தாரக மந்திரத்துடன் முன்னேறி செல்வோம்.
சுகாதார அட்டை
இந்தியாவில் சுகாதார திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இது, சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும். நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சுகாதார அட்டையில், சிகிச்சை குறித்த விவரங்கள், டிஸ்சார்ஜ் குறித்த விவரங்கள், டாக்டர் உங்களுக்கு என்ன மருந்து பரிந்துரை செய்தார் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். சுகாதார அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும், தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.