பனைமரம் வெட்டிய 3 பேர் கைது: பெண் அதிகாரிகளுக்கு பனைவாழ்வியல் இயக்கம் பாராட்டு
1 min read
Cut down the palm tree 3 arrested: Palmyra movement praises female officers
11-9-2020
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக அதிரடி நடவடிக்கையாக
அரசு சின்னமாக விளங்கும் பனைகளை வெட்டிய
3 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி நடவடிக்கை எடுத்த பெண் அதிகாரிகளுக்கு பனைவாழ்வியல் இயக்கம் பாராட்டு தெரிவித்து உள்ளது.
பனை மரம்
சுதந்திரத்திற்கு பிறகு இந்திய நாட்டின் அடையாளமாக பண்டைக்கால வரலாறு, மரபுரிமை ஆகியவற்றை பறைசாற்றும் விதமாகத்தான் பல்வேறுபட்ட பின்னணியின் மாதிரிகளாக இந்தியர்களின் பெருமைக்கு உரியதாக தேசிய சின்னங்கள் வரையறுக் கப்பட்டுள்ளன. இதே அடிப்படையில்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த மக்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு, இயற்கை ஆகியவற்றை மையப்படுத்தி தனித்தனியாக சின்னங்கள் தொகுக்கப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டின் அரசு சின்னங்கள் பட்டியலில் தேசிய மரமாக பனை இடம் பெற்றுள்ளது.
இதுபோன்ற தேசிய சின்னங்களை அவமதிப்பது தேசத்தையே அவ மதிப்பது போன்றது என்பதை தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச்சட்டம் 1971 பிரிவு2 தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அரசின் அடையாளச்சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையின்றி பயன்படுத்துவதை தடைசெய்யும்) சட்டம் – 1950-ன் கீழ் தண்டனைக் குரிய குற்றமாகவும் இந்திய அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மதுரை உயர்நீதிமன்றமும் தமிழர் வாழ்வியலில் முக்கிய அங்கம் வகிக்கும் பனைகளை வெட்ட தடைசெய்யும் வழிகாட்டுதல் உத்தரவை வழங்கியிருக்கிறது.
வெட்டி அழிப்பு
இந்த நிலையில் செங்கல்சூளைகளின் எரிபொருள் தேவைக்காக தமிழ்நாட்டின் மாநில மரமான பனைகளை வெட்டி அழிக்கும் செயல் தடையின்றி நடந்து வருகி றது. குறிப்பாக தென்மாவட்டங்களில் இந்த அத்துமீறல் தடையின்றி நடக்கிறது.
இது குறித்து பனைவாழ்வியல் இயக்கம் சார்பில் பிரதமர் குறைதீர்க்கும் பிரிவு, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் கள் அனுப்பப்பட்டு உள்ளன.
பனைகளை வெட்ட தடைச்சட்டம் கோரி தமிழகம், புதுவை மாநில முதல்-அமைச்சரிகளிடம் பனைவாழ்வியல் இயக்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகப்படியான செங்கல்சூளைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் எரிபொருள் தேவைக்காக இந்த 3 மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் டன் கணக்கில் பச்சை பனைகள் அடிமாட்டு விலைக்கு வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வந்தன.
கைது
இது குறித்த புகாரின் பேரில் தென்காசி மாவட்ட வருவாய்த்துறைக்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசு பரிந்துரை செய்தது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியில் ஓ.துலுக்கப்பட்டி செல்லும் வழியில் குளக் கரையில் உள்ள பச்சைப் பனைகள் வெட்டப்படுவதாக பனை வாழ்வியல் இயக்கத்திற்கு புகார்கள் வந்தன.
அதனடிப்படையில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர், ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜன், இளையபாரதம் அமைப்பின் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் புகார் அளித்தனர். அதன் பேரில் கிராம நிர்வாக அதிகாரி குணா சம்பவ இடத்தை பார்வையிட்டு பனைகள் வெட்டப் பட்டதை உறுதி செய்தார்.
பனைகள் வெட்டப்பட்ட இடம் பொதுப்பணித்துறைக்கு சம்பந்தப்பட்ட குளக்கரை என்பதால் மேல் நடவடிக்கைக்காக சேரன்மகாதேவி பொதுப் பணித்துறை பணி ஆய்வாளர் ஷோபனாகுமாரிக்கு பரிந்துரை செய்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் முக்கூடல் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) குமாரி சித்ரா தலைமையில் காவலர்கள் மாணிக்கராஜ், சுரேஷ், மகேஷ், இளையராஜா ஆகியோர் அடங்கிய படையினர் விரைந்து சென்று பனைகளை வெட்டிய பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த சுதாகர் (20), பனையங்குறிச்சியைச்சேர்ந்த சின்னதம்பி (34), முருகன் (எ) எம்ஜிஆர் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பனை மரங்களை வெட்டச் சொல்லியதாக நந்தன்தட்டையை சேர்ந்த சீனி பாண்டியன், சேரன்மகா தேவியை சேர்ந்த கணேசன் ஆகியோரை தேடி வருகிறார்கள். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 427 (பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல்), 379 மற்றும் 511 (களவு செய்ய முயற்சித்தல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செங்கல்சூளை அதிபர்களின் ஆதாயத்திற்காகவும், அவர்கள் மீதான அச்சம் காரணமாகவும் பல இடங்களில் நடவடிக்கை எடுக்க முடியாமல் அரசு அதிகாரிகள் திணறி வரும் நிலையில் துணிச்சலாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இரு பெண் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நடவ டிக்கை எடுத்து தமிழக அரசு சின்னமான பனைகளை வெட்டிய நபர்களை கைது செய்திருப்பது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நடந்திருக்கும் சாதனை முயற்சி யாகும். பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் ஷோபனாகுமாரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா ஆகியோருக்கு பனை வாழ் வியல் இயக்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை தமிழகத்திற்கே முன் மாதிரியானது எனவும், இதனை பனை தறிப்பு தடைச்சட்டம் வகுப்பதற்கான முகாந்திரமாக கொண்டு மாநிலம் முழுவதும் பனைகளை வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், இந்த பனைகள் அழிப்பு விவகாரத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்ட பெண் அதிகாரிகளை அரசு கௌவரவிக்க வேண்டும் எனவும் பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.