சென்னையில் அமித்ஷாவை உற்சாகமாக வரவேற்ற அ.தி.மு.க.வினர்
1 min read
The AIADMK leader enthusiastically welcomed Amit Shah in Chennai
21/11/2020
சென்னை வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை அ.தி.மு.க.வினர் உற்சாகமாக வரவேற்றனர்.
அமித்ஷா
பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று( சனிக்கிழமை) சென்னை வந்தார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருக்கு பாரதீய ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாரதீயஜனதா மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொறுப்பாளர் சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அமித் ஷாவை வரவேற்றனர்.
இதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
அ.தி.மு.க. வரவேற்பு
விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து லீலா பேலஸ் ஓட்டல் செல்லும் வழியில் அமித்ஷா காரில் இருந்து இறங்கி நடந்து சென்றார்.
சாலையில் இறங்கி தொண்டர்களை பார்த்து அமித் ஷா கையசைத்து நடந்து சென்றார். சாலையின் இருபுறமும் குவிந்துள்ள பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களின் வரவேற்பை அமித் ஷா ஏற்றுக்கொண்டார்.
விமான நிலையத்தில் இருந்து அமித் ஷா ஓட்டல் செல்லும் வழியில் பாஜக, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவினர் கொடியுடனும் ஆடல், பாடல் நிகழ்ச்சியுடனும் உற்சாகத்துடன் வரவேற்றனர். சாலையின் இருபுறமும் குவிந்துள்ள அதிமுக, பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் நடனமாடி அமித் ஷாவை வரவேற்றனர்.
மகிழ்ச்சி
இதற்கிடையில் தான் சென்னைக்கு வந்து சேர்ந்தது குறித்து அமித்ஷா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.