நாளை பந்த்- தமிழகத்தில் பஸ், ரெயில்கள் இயங்கும்
1 min read
Buses and trains will run in Tamil Nadu tomorrow
7/12/2020
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கத்தினர் நாளை பந்த் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் நாளை பஸ், ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பந்த்
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சங்கங்கள் போராடி வருகின்றன. அவர்களுடன் மத்திய அரசு அடுத்தடுத்து நடத்திய 5 கட்ட பேச்சுவார்தைகள் தோல்வி அடைந்தன. அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதரவு
இந்த நிலையில் விவசாயிகள் சங்கம் நாளை( செய்வாய்க்கிழமை) நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது. பகல் 11 மணி முதல் பிறப்பகல் 3 மணி வரை கடைகள் அடைத்து அமைதியாக முறையில் போராடப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா, ஆம்ஆத்மி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட 18 கட்சிகள் அறிவித்துள்ளன.
தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைமையிலான கூட் டணி கட்சிகள் விவசாயிகள் போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.
வட மாநிலங்களில் இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தப் போவதில்லை என்று கம்யூனிஸ்டு அரசு அறிவித்துள்ளது.
பஸ்கள் இயங்கும்
தமிழகத்தில் இந்தப் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அனைத்துவித முன்எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் சார்பாக 22 ஆயிரம் அரசு பஸ்கள் வழக்கமாக இயக்கப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் முழுமையாக திறக்கப்படாததால் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆம்னி பஸ்கள் ரத்து
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறும்போது, “பொது வேலைநிறுத்தம் காரணமாக நாளை பகலில் ஆம்னி பஸ் சேவை ரத்து செய்யப்படுகிறது.
பகல் நேரத்தில் மிக குறைந்த அளவில் தான் பஸ்கள் இயக்கப்படும். மாலை 6 மணிக்கு பிறகு எல்லா பகுதிகளுக்கும் ஆம்னி பஸ் சேவை தொடரும்” என்றார்.
ரெயில்கள் இயங்கும்
முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ரெயில் போக்குவரத்து தடைபடாது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல் நாளை இயக்கப்படுகிறது.
வழக்கமான கால அட்டவணைப்படி ரெயில்கள் புறப்பட்டு செல்லும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மின்சார ரெயில்கள் வழக்கம் போல் ஓடும். மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காரணத்தால் மட்டுமே சேவை ரத்து செய்யப்படும்.” என்றார்.
நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., மத்திய தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்திருப்பதால் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்த் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நாளை அதிகாலையில் இருந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. பணிமனையில் இருந்து பஸ்களை எடுக்கும்போது பலத்த பாதுகாப்பு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.