July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் நாளை முதல் 2 ஆயிரம் மினி கிளினிக்

1 min read

2 thousand mini clinics in Tamil Nadu from tomorrow

13/12/2020

தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மினிகிளினிக் நாளை முதல் தொடங்கப்படுகிறது.

மினி கிளினிக் திட்டம்

தமிழகத்தில் கொரோனா பரவியதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து விட்டதால், ஊரடங்கு உத்தரவும் பெருமளவு தளர்த்தப்பட்டு விட்டது.

கொரோனா உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் மருத்துவமனைகளில் மற்ற நோய்களைவிட கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மற்ற நோய்களுக்கும் சிகிச்சை பெற முடிகிறது.
ஆனாலும் இருமல், சளி இருந்தால் கொரோனா தொற்று குறித்த சந்தேகம் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் சாதாரண காய்ச்சல் மற்றும் மற்ற நோய்களுக்கு உடனே சிகிச்சை பெற முடியாத சூழல் பலருக்கு ஏற்பட்டது.

இதையறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

மருத்துவ வசதிகள் எளிதாக கிடைக்கும் வகையில் மினி கிளினிக்கிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் இடம்பெறுவார்கள் என்றும் காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கும் இந்த மினி கிளினிக்கில் மருந்துகள் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

நாளை முதல்…

இதை செயல்படுத்துவதற்காக புதிதாக டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதற்காக ஏராளமான டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதைத்தொடர்ந்து 2 ஆயிரம் மினி கிளினிக் திட்டம் நாளை தொடங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு ‘முதல் அமைச்சரின் அம்மா மினி கிளினிக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நாளை காலை ராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைக்கிறார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் மொத்தம் 200 மினி கிளினிக் செயல்பட உள்ளது. இதில் 47 இடங்களில் முதல்கட்டமாக மினி கிளினிக் அமைக்கப்படுகிறது.

இதில் 20 இடங்களில் நாளை முதல் மினி கிளினிக் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் மினிகிளினிக் திட்டம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

இதன் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் எளிதாக சிகிச்சை பெற அரசு வழிவகை செய்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.