July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

அருவிகளுக்கு பூஜை நடத்தியபின் பொதுமக்கள் குளிக்க அனுமதி

1 min read

The public is allowed to bathe after performing pooja at the waterfalls

15/12/2020

குற்றால அருவிகளில் 270 நாட்களுக்குப்பிறகு பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக எல்லா அருவிகளுக்கும் பூஜை நடந்தது.

குற்றால அருவிகள்

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் குற்றால அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சுற்றுலா தலங்களுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கான தடை மட்டும் தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுவதாக தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் நேற்று அறிவித்தார். இதனால் 9 மாதங்களுக்கு மேலாக அருவிகளுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை முடிவுக்கு வந்தது.

பூஜை

இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதற்காக நேற்று நள்ளிரவு முதலே சுற்றுலா பயணிகள் அருவிகள் முன்பு குவியத் தொடங்கினர். ஆண்கள், பெண்கள் என திரளான சுற்றுலாப்பயணிகள் பல கிலோ மீட்டர் தூரத்தற்கு வரிசையில் காத்திருந்தனர்.

270 நாட்களுக்கு பின்னர் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் மெயினருவி, ஐந்தருவிகளில் அதிகாலை சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

அதற்காக அவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நிற்க அடையாளங்கள் வரையப்பட்டிருந்தது.

அனைத்து அருவிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு குழுவினர், குளிக்க செல்லும் அனைவருக்கும் உடல் வெப்ப மானி கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர். அதில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லையென்ற பின்னரே குளிக்க அனுமதித்தனர்.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் 25 பேரும், பெண்கள் பகுதியில் 15 பேரும் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அருவியில் 5 நிமிடங்களில் குளித்தனர். பின்னர் இதே போல் மற்றொரு பிரிவினர் சென்றனர்.

இதேபோல் ஐருந்தருவியில் ஆண்கள், பெண்கள் என தலா 20 பேரும், புலியருவியில் தலா 10 பேரும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

மலைப்பகுதியில் மழை இல்லாததால் தற்போது அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுகிறது. எனினும் வெகு நாட்களுக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.