தடையை மீறி மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு
1 min read
It was decided to go on a hunger strike tomorrow under the leadership of MK Stalin in defiance of the ban
17/12/2020
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருக்க தி.மு.க.வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நாளை தடையை மீறி மு.க.ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து உண்ணாவிரத போராட்டத்துக்கு முறைப்படி போலீசாரிடம் அனுமதியும் கேட்டுள்ளனர்.
மறுப்பு
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க தி.மு.க. சார்பில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பான கடிதமும் தி.மு.க.வுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடத்த தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். இந்த உண்ணாவிரதத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கூட்டணி தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இதற்காக 3 மேடைகள் அருகருகே அமைக்கப்பட்டு உள்ளது. நடுவில் போடப்படும் மேடையில் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளன.
வலதுபுறம் போடப்படும் மேடையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அமருகிறார்கள். இடதுபுறம் போடப்படும் மேடையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இடத்துக்கு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேடையின் முன்புறம் ஆயிரம் இருக்கைகள் போடப்படுகின்றன. இந்த இருக்கைகளில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
வெளியில் இருந்து வரும் தொண்டர்கள் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு வந்து விட்டு உடனடியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
போலீஸ் பாதுகாப்பு
உண்ணாவிரத போராட்டத்தையொட்டி நுங்கம்பாக்கத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா பரவலால் பொதுஇடங்களில் கூட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
வருகிற 19-ந்தேதி முதல் தான் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டியே நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.