June 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கடலூர் முதல் குமரி வரை…ஜனவரியில் இவ்வளவு கனமழை ஏன்?

1 min read

From Cuddalore to Kumari … Why so much rain in January?

13/1/2021

எந்த ஜனவரியிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரியில் தமிழகம் கனமழையில் நனைந்து வருகிறது.

பொதுவாக மார்கழியில் பனி தான் கொட்டும் என்பார்கள். ஆனால் இந்த மார்கழியோ கனமழை மாதமாக வரலாற்றில் பதிவாகி வருகிறது. 

ஜனவரி தொடக்கத்தில் சென்னையிலும், பிறகு கடலூர் தொடங்கி, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை வழியே கன்னியாகுமரி வரையிலும் 2 வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழ்நாடு மட்டுமல்ல; அண்டை நாடான இலங்கைத்தீவும் நல்ல மழைப்பொழிவைப் பெற்று வருகிறது. 

புயல் உருவாகவில்லை; குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இல்லை. அப்படி இருந்தும் புயலின்போது கொட்டுவதற்கு நிகராக மழை கொட்டுகிறது. 

எனவே இது  அசாதாரணமான மழையே. 

எனினும், சென்னை வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர்கள் சிலரும் இந்த ஜனவரியில் பலத்த மழை காத்திருக்கிறது என முன்கூட்டியே கணித்து இருந்தனர்.

அந்த கணிப்பு தவறாமல் மழை கொட்டி வருகிறது.

“கடல் வெப்பம் உயர்ந்ததே காரணம்”

பருவம் தவறிய இந்த மழைக்கு என்ன காரணம் என்று வானிலை ஆய்வாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, “கடல் வெப்ப நிலை” என்று பதில் அளித்தார். சற்று விளக்கமாகச் சொல்லமுடியுமா என்று கேட்டபோது அவர் சொன்னதாவது:-

” இயற்கை எப்படியும் மாறலாம். என்றாலும், வானிலை நிலவரங்களையும், சில அனுபவங்களையும் வைத்து இதைச் சொல்கிறேன்.

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தமிழக கடற்கரை பகுதிகளுக்கு அப்பால் கடல்  மேற்பரப்பு நீர் அதிகப்படியான வெப்பம் அடைந்துள்ளது. இந்த வெப்ப நிலை உயர்வு காரணமாக  கடல் மேற்பரப்பு நீர் மிக அதிக அளவில்  ஆவியாகி மழை மேகங்கள் உருவாகி மழை பொழிகிறது.  இந்த வெப்பநிலை உயர்வுக்கு  கிழக்கு நோக்கிய வெப்ப மண்டல அலையும் காரணமாக இருக்கலாம்.

இந்த நிலை நீடிப்பதால், காவிரி வடிநில (டெல்டா) மாவட்டங்கள் தொடங்கி  மேற்கு மாவட்டங்கள் வரை (ஜனவரி 15 வரை)  மழை தொடரும். (ஆக, இவ்வாண்டு தைப்பொங்கலும் மழைப் பொங்கல் தான்). 

ஜனவரி 16-17 க்குப் பிறகு மழை ஓய்ந்து,  சில நாட்கள்  வறண்ட வானிலை நிலவும். இதில் மாற்றமில்லை.

எனினும் இத்தோடு மழை ஓயாது எனக்கருதுகிறேன். இம்மாத இறுதியில் மீண்டும் தொடங்கி, பிப்ரவரியிலும் ஒரு சுற்று மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன.”

இவ்வாறு அவர் சொன்னார்.

நிலைமை இவ்வாறு இருக்க, “எங்கள் ஊரில் மழை இல்லையே, குளங்கள் பெருக வில்லையே” என்று குறைப்பட்டுக்கொள்ளும் ஊர்களும் தமிழகத்தில் இருக்கவே செய்கின்றன. மழை மறைவுப் பிரதேசங்களாகி விட்ட அப்பகுதி மக்களின் மனம் குளிர மழை பெய்யவில்லை என்பதும் உண்மை தான்.

அதேநேரம், “போதும் போதும் மழை” என்று சொல்லும் அளவுக்கு சேதாரங்களை சந்தித்த பகுதிகளும் கண்முன்னே காட்சி தருகின்றன. 

“மழை பெய்யாமலும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும்.”  இதைத்தான் வள்ளுவப்பெருந்தகை இப்படிச்சொன்னாரோ?

‘கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை’

பொருள்: “மக்களைக் கெடுக்க வல்லதும் மழை; வாழவைப்பதும் மழையே.”

–மணிராஜ்,

திருநெல்வேலி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.