தமிழ்நாட்டில் தபால் நிலைய தேர்வுகளை தமிழில் எழுதலாம்
1 min read
Post office exams in Tamil Nadu can be written in Tamil
15.1.2021
தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட தபால் நிலைய தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தபால் நிலையம்
தமிழகத்தில் தபால் நிலையதேர்வுகள் மற்றும் ரெயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 4ந் தேதி வெளியிடப்பட்டது. அந்த தேர்வுகளை ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே எழுதவேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பிற்கு தமிழத்தில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தமிழில்…
இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா, இன்று(வெள்ளிக்கிழமை) சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், “தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரெயில், தபால் சேவை கணக்கர் உள்ளிட்ட வேலைகளுக்கான மையப்படுத்தப்படாத துறை வாரிய தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதில் கடிதத்தை செய்தி குறிப்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ளார். இது தமிழர் திருநாளுக்கு கிடைத்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சலக தேர்வுகள் வரும் பிப்ரவ்ரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.