காங்கிரஸ் எம்.பி.யை கண் கலங்க புகழ்ந்த மோடி
1 min readModi praises Congress MP
9.2.2021
காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி கண்ணீர் மல்க புகழ்ந்தார்.
குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் பாராளுமன்ற மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அவரது மேல்சபை எம்.பி. பதவிக்காலம் இன்று ( செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
அவருடன் காஷ்மீரை சேர்ந்த மேலும் 2 எம்.பி.க்களின் பதவியும் முடிகிறது. இதையட்டி அவர்களுக்கு பிரியாவிடை அளித்தபோது பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
குலாம்நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியபோது பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். குலாம்நபி ஆசாத் காஷ்மீர் முதல்-மந்திரியாக இருந்த போது சுற்றுலா பயணிகள் தவித்தனர். அப்போது அவர்களை மீட்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு தான் நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறினார்.அப்போது மோடி கண்கலங்கினார்.
மோடி கண்கலங்கி குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்தபோது அவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டினர். குலாம்நபி ஆசாத்தும் பதிலுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதற்கிடையே பாராளுமன்ற மேல்சபையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி நேற்று பேசும்போது குலாம்நபி ஆசாத்தை பாராட்டினார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-
குலாம்நபி ஆசாத் மென்மையாக பேசக்கூடியவர். கண்ணியமான நபர். யாரையும் புண்படுத்த மாட்டார். அவருக்கு கடினமான வார்த்தைகளை பயன்படுத்த தெரியாது. இதனால் மற்ற எம்.பி.க்கள் குலாம்நபி ஆசாத்திடம் இருந்து கண்டிப்பாக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவரை பின்பற்ற வேண்டும்.
காஷ்மீரில் தேர்தல் நடத்தியதற்காக அவர் எங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதற்காக நான் அவரை மதிக்கிறேன். இதை உங்கள் (காங்கிரஸ்)கட்சியை சேர்ந்தவர்கள் சரியான உத்வேகத்துடன் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு மோடி பேசினார்.
இந்திய முஸ்லிம்
காங்கிரஸ் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்சியில் சீர்திருத்தம் அவசியமானது என்று கூறியும் கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்களில் குலாம்நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா எம்.பி.,க்கள் அளித்த பிரியாவிடை உரைக்கு நன்றி தெரிவித்து குலாம் நபி ஆசாத் பேசியதாவது: நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுக்கு ஒரு போதும் செல்லாத அதிர்ஷ்டசாலி மக்களில் நானும் ஒருவன். பாகிஸ்தானில் நடக்கும் சில விரும்பத்தகாத விஷயங்கள் பற்றி படிக்கும் போது, நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.