May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: இதுவரை 58 பேரின் உடல்கள் மீட்பு

1 min read

Uttarakhand floods: 58 bodies recovered so far

18.2.2021

உத்தரகாண்டில் பனிப்பாளம் உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் பலியானார்கள். இதுவரை 58 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

வெள்ளப் பெருக்கு

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் தபோவன்-ரேனி பகுதியில் கடந்த வாரம் பெரிய அளவிலான பனிப்பாளங்கள் திடீரென உடைந்தன. இதனால் உருகிய பனியானது, நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா மற்றும் அலக்நந்தா ஆறுகளில் கலந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் பல வீடுகள், ரிஷிகங்கா மின் நிலையம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டன. மின் நிலைய பணியாளர்கள் பலர் வெள்ள பெருக்கில் சிக்கி கொண்டனர். ஏறக்குறைய 100 முதல் 150 பேர் பலியாகி இருக்க கூடும் என அம்மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் அச்சம் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 3 குழுக்கள், மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்பு

இந்திய விமான படையின் இரண்டு மி-17 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர் ஒன்று என மொத்தம் 3 ஹெலிகாப்டர்கள் டேராடூன் மற்றும் அதனை அடுத்துள்ள பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. தேவைக்கேற்றாற்போல் கூடுதல் ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதவிர ராணுவ வீரர்கள், 2 மருத்துவ குழுக்கள் மற்றும் பொறியியல் அதிரடி படை ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டன. ராணுவ ஹெலிகாப்டர்களும் சென்றன.

அந்த பகுதியில் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டது. வெள்ளத்தில் மலாரி பகுதியருகே பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. தபோவன் அணையில் சிக்கியிருந்த 16 பேரை முதலில் போலீசார் மீட்டு பாதுகாப்பு பகுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்தோ-திபெத் எல்லை போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் முதலில், 9 உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன என இந்தோ-திபெத் எல்லை போலீசின் இயக்குனர் ஜெனரல் எஸ்.எஸ். தேஸ்வால் கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், உத்தரகாண்ட் பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், 58 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. அவற்றில் 31 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 146 பேரை இன்னும் காணவில்லை என தெரிவித்து உள்ளது.

வரும் 19ந்தேதி (நாளை) வரை, காணாமல் போனவர்கள் பற்றிய எந்தவித தகவலும் இல்லையெனில், விதிமுறைகளின்படி இழப்பீடு வழங்கும் நடைமுறை தொடங்கப்படும் என ஜார்க்கண்ட் தொழிலாளர் ஆணையாளர் முத்துக்குமார் தெரிவித்து உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.