July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

“ஏழைகள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது” : பிரதமர் மோடி பேச்சு

1 min read

“Changes have taken place in the lives of the poor”: Prime Minister Modi’s speech

20/2/2021

இலவச மின், கியாஸ் இணைப்பு மற்றும் சுகாதார வசதிகளால் ஏழைகள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என்று பிரதமர் மோடி பேசினார்.

நிதி ஆயோக்

நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்ட கமிஷன் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன் கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பு கொண்டு வரப்பட்டது. அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது. நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பாக ஆட்சி மன்ற குழு உருவாக்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் அந்த குழு இயங்கி வருகிறது. அனைத்து மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச கவர்னர்கள், மத்திய மந்திரிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் அதில் இடம் பெற்றுள்ளனர். ஆட்சி மன்ற குழுவின் முதல் கூட்டம், கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 8-ந்தேதி நடைபெற்றது. அதன்பிறகு ஆண்டுதோறும் அதன் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் கொரோனா தாக்கம் காரணமாக நடைபெறவில்லை.

இந்த நிலையில், நிதி ஆயோக் ஆட்சி மன்ற குழுவின் 6-வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வழியே தொடங்கி இன்று(சனிக்கிழமை) நடந்து வருகிறது. அதில், தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்றுள்ளனர்.

இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

முக்கியத்துவம்

மத்திய மற்றும் மாநிலங்களின் ஒன்றிணைந்த பணியானது நாட்டின் வளர்ச்சிக்கான அடிக்கல்லாக உள்ளது. நாம், ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி சென்று, ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியை இன்னும் அர்த்தமுள்ள ஒன்றாக உருவாக்க வேண்டும்.
இவற்றுடன் நில்லாமல், மாநிலங்கள் மட்டுமின்றி மாவட்டங்களிடையேயும், போட்டியுடனான, ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியை கொண்டு வருவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.
இந்த கொரோனா காலத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் எப்படி ஒன்றிணைந்து செயல்பட்டன என நாம் கண்டோம். நாடு வெற்றி பெற்றது. உலகம் முழுமைக்கும் இந்தியாவை பற்றிய ஒரு நல்ல தோற்றம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நாம் நிறைவு செய்ய உள்ளோம். அதனால், இந்த ஆட்சி மன்ற குழு கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பட்ஜெட்

கடந்த சில ஆண்டுகளில், வங்கி கணக்கு தொடக்கம், தடுப்பு மருந்துகள் மற்றும் சுகாதார வசதிகள் அதிகரிப்பு, இலவச மின் இணைப்பு, இலவச கியாஸ் இணைப்பு உள்ளிட்டவை ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அவர்களுடைய வாழ்வில் ஆச்சரியமளிக்கும் வகையிலான மாற்றங்களை பிரதிபலித்தது.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது என்பது நாட்டின் மனநிலையை வெளிப்படுத்தி உள்ளது. விரைவாக வளர்ச்சி அடைய வேண்டும், நேரம் இழப்பு தவிர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் நாட்டிலுள்ளது. நாட்டின் மனநிலையை அமைப்பதில் இளைஞர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.