அடுத்தடுத்து எம்.எல்.ஏ.கள் ராஜினாமா; புதுச்சேரி அரசு கவிழும் ஆபத்து
1 min readSuccessive MLAs resign; Puducherry government in danger of toppling
21.2.2021
புதுச்சேரியில் ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.கள் 2 பேர் இன்று ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபையில் நாளை( திங்கட்கிழமை) காங்கிரஸ் அரசு பலத்தை நிரூபிக்க வேண்டும். எனவே அந்த அரசு தப்புமா என்பது நாளை தெரியும்.
காங்கிரஸ் அரசு
புதுவையில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-அமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இந்த அரசுக்கு காங்கிரஸ் 15, தி.மு.க. 3, சுயேட்சை 1 என 19 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்து வந்தது. எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பாரதீய ஜனதா (நியமனம்) 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
இந்தநிலையில் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், மற்றும் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.
சமநிலை
இதனால் தற்போது சட்டமன்றத்தில் உள்ள 28 எம்.எல்.ஏ.க்களில் ஆளுங்கட்சி (சபாநாயகர் உள்பட) 14, எதிர்க்கட்சிகள் 14 என சமநிலையில் எம்.எல்.ஏ.க்களின் பலம் இருந்து வருகிறது. எனவே இந்த அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள், கவர்னர் மாளிகைக்கு சென்று முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.
நிரூபிக்க உத்தரவு
புதியதாக நியமிக்கப்பட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 18 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
நாளை (22 ஆம் தேதி) பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏவான லக்?ஷ்மிநாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமிநாராயணன், கட்சியில் உரிய மரியாதை இல்லலாததால் ராஜினாமா செய்ததாகவும் என்னால் ஆட்சி கவிழவில்லை. ஏற்கனவே அது கவிழக்கூடிய நிலையில் தான் உள்ளது எனவும் தெரிவித்தார். புதுச்சேரியில் தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம் 13 ஆக குறைந்துள்ளது.
தி.மு.க.
இதற்கிடையே தற்போது புதுச்சேரி – தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ வெங்கடேசனும் ராஜினாமா செய்துள்ளார். அவர் கடந்த 2019 இடைத்தேர்தலில் தேர்வாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் வேறு கட்சியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு தற்போது 12 எம்.எல்.ஏக்கள் பலம் மட்டுமே கொண்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணி 14 எம்.எல்.ஏக்களை கொண்டுள்ளது.
எனவே புதுவையில் காங்கிரஸ் கூட்டணி அரசு தப்புமா என்பது சந்தேகமே. புதுச்சேரி அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எதுவானாலும் நாளை( திங்கட்கிழமை) முடிவு தெரியும்.