தா.பாண்டியன் மரணம்
1 min readTha. Pandian Passes away
26.2.2021
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று மரணம் அடைந்தார்.
மரணம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று ( வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 89. சிறுநீரக தொற்று, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
வாழ்க்கை வரலாறு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் 1932ல் பிறந்த தா.பாண்டியன், மாணவர் பருவத்தில் கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். அழகப்பா கல்லூரியில் பேராசிரியராக பணியை தொடங்கிய தா.பாண்டியன், ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கி 1983 முதல் 2000 வரை மாநில செயலராக இருந்தார்.
பின், 2000ம் ஆண்டு கட்சியை கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் இணைந்தார். இதற்கிடையே 1989 முதல் 1996 வரை இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலராக 2005 முதல் 2015 வரை பதவி வகித்தார். கடந்த 2018 வரை இந்திய கம்யூனிஸ்டு தேசிய நிர்வாக்குழு உறுப்பினராக பதவி வகித்தார்.
இரங்கல்
அவரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தா.பாண்டியன் அவர்களின் வாழ்க்கையும், அவருடைய அனுபவங்களும் இளம் தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் சற்றும் ஐயமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், தா.பாண்டியன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்ததாகவும், அவரது குடும்பத்தாருக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அன்னாரது ஆன்மா சாந்தியடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புடம் போட்ட தங்கம் போல் வாழ்ந்த பொதுவுடைமைப் போராளி தோழர் தா.பாண்டியன் மறைந்தாரே”என்று கூறியுள்ளார். மேலும் தோழர் தா.பாண்டியன் அவர்கள் அன்னைத் தமிழ் மீதும், தமிழகம் மீதும், இந்தியாவின் பன்முகத்தன்மை மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “பொதுவுடைமைத் தூணொன்று சாய்ந்தது. பற்பல விழுதுகள் பாய்ச்சிவிட்டு கம்யூனிஸ வேரொன்று வீழ்ந்திருக்கிறது. தோழர் தா.பாண்டியன் மறைவு தமிழர்கள் அனைவருக்குமே பொது இழப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அவரது இரங்கல் செய்தியில், “முற்போக்கு சிந்தாந்த தளத்தில் தா.பாண்டியன் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. அவரது மறைவு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பாகும். ஈழத் தமிழர்களின் நலன்களில் அக்கறையோடு பணியாற்றியவர். அவருக்கு எமது வீரவணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.