May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மீண்டும் கொரோனா பரவல்:அறிவியலின் கொடை’யான தடுப்பூசி எனும் ஆயுதம் கொண்டு போர் நடத்தி முறியடிப்போம்’

1 min read

Let’s break it down with the vaccine

16/3/32021

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்று அனைத்துத் தரப்பினரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்தனர்.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாள் பாதிப்பு 6,500 என்ற உச்சத்தை எட்டிய நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளாலும், பாதுகாப்பு விதிகளைப் பொதுமக்கள் உறுதியாகக் கடைப்பிடித்து வந்ததாலும் கடந்த 6 மாதங்களாக பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வந்தன.
மிரட்டும் மார்ச் மாதம்
கடந்த 2020-ம் ஆண்டு இதே மார்ச் மாதத்தில் தான் கொரோனா பரவல் தொடங்கி, பொதுமுடக்கம் அமலுக்கு வரத்தொடங்கியது. செப்டம்பர் வரை உச்சத்தில் இருந்து வந்த கொரோனா பரவல் அதன்பின் படிப்படியாக குறைந்து வந்தது.
இம்மாத ஆரம்பத்தில் தினசரி பாதிப்பு 450 என்ற அளவுக்கு இறங்கி வந்தது. ஆனால் கொரோனாவுக்கும் மார்ச் மாதத்துக்கும் என்ன பொருத்தமோ, மீண்டும் அதே மார்ச்சில் கொரோனா பாதிப்புகள் கூடத்தொடங்கி விட்டன. 500, 600, 700 என அதிகரித்து வந்த தினசரி பாதிப்புகள், மார்ச் 15&ல் 836 என்ற அளவை எட்டி விட்டன.
தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த இரு வாரங்களில் 171 என்ற எண்ணிக்கையில் இருந்து 317 என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
காற்றில் பறந்த விதிகள்
பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் ஓய்ந்து விட்டதாகக் கருதிக் கொண்டு சகல தரப்பினரும் அலட்சியமாக நடந்து கொண்டதுதான் இந்த நிலைக்குக் காரணமாகும். கை குலுக்குவதைத்தவிர்த்தல், கை கழுவுதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கையுறைகளை அணிதல் முதலான பாதுகாப்பு விதிகளை பெரும்பாலோனோர் மறந்து விட்டனர்.
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் ஓயவில்லை என்பதையே சமீப நிகழ்வுகள் காட்டுகின்றன. இது இப்படியே நீடித்தால், கொரோனாவின் அடுத்த அலை வீசுவதைத் தடுக்க முடியாது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
கல்வி நிறுவனங்கள் மூலம் கொரோனா பரவும் சூழலில் அவற்றைத் தற்காலிகமாக மூடுவதும் அரசு பரிசீலிக்க வேண்டிய விஷயமாகும். தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு தவிர்த்து மீதமுள்ள அனைத்து வகுப்புகளின் மாணவர்களும் தேர்ச்சி பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 9, 10, 11 ஆகிய வகுப்புகளின் மாணவர்களுக்குப் பள்ளிகளை நடத்துவது தேவையற்றதாகும். எனவே, 12-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்குத் தமிழக அரசு விடுமுறை அறிவிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதுவரை 3.29 கோடி பேருக்கு தடுப்பூசி
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 16 முதல் முன்களப்பணியாளர்களுக்கு முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2-வது கட்டமாக இப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கும் மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் செயல்திறன் 80 சதவீதத்திற்கு மேல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் முற்றிலும் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரு.250 கட்டணம் பெற்றுக் கொண்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
என்றாலும், தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை. இந்தியாவில் இதுவரை 3 கோடியே 29 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 30 லட்சம் பேரும், கடந்த 15 நாட்களில் 1 கோடி பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனினும், அரசின் இலக்கில் இது பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தடுப்பூசியின் அவசியம் குறித்து அரசு தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பலாம். அதாவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை பேச வைத்து அவர்களுக்கு தடுப்பூசியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை மக்கள் உணர வைக்கவேண்டும்.
பிரதமர் மோடி, தமிழக முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதிமய்யத்தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு, மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். இந்தத்தலைவர்களைப்பின்பற்றும் தொண்டர்கள் இனியாவது தடுப்பூசி தொடர்பான தேவையற்ற அச்சங்களில் இருந்து விடுபட வேண்டும்.
அறிவியல் எதிரிகள் பரப்பும் தேவையற்ற வதந்திகள்
தடுப்பூசி பற்றிய அடிப்படை அறிவு இல்லாத, அறிவியலுக்கு எதிரான ‘வாட்ஸ்&அப் மேதாவிகள்’ தேவையின்றி கிளப்பி விடும் வதந்திகள் குறித்து அரசு தகுந்த விளக்கம் அளித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வயது வரம்பின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று, அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திடவேண்டும்.
தடுப்பூசி கண்டுபிடிக்காதபோது, பொதுமுடக்கம், ஊரடங்கு என மக்களை சங்கடப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது தான் தடுப்பூசி வந்து விட்டதே… அதன் துணை கொண்டு கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் முயற்சிகளில் அரசு முனைப்பு காட்டலாமே…
அரசும் முனையவேண்டும். பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவேண்டும். அப்படியானால்தான் கொரோனா பரவலை முறியடிக்கமுடியும்.
தேசிய தடுப்பூசி தினம்
மார்ச் 16&ந் தேதியான இன்று தேசிய தடுப்பூசி தினமாகும். இதை முன்னிட்டு, திமுகழகத்தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளனர். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்;
“இன்று தேசிய தடுப்பூசி தினம்.
மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்&19 பிடியில் இருந்து நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ள, எவ்வித தயக்கமும் இன்றி, அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக் கொள்வோம்.
தவறாமல் முகக்கவசமும் அணிவோம்!
கொரோனாவை வெல்வோம்!”
மேற்கண்டவாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
அவர் சொன்னது போல் தடுப்பூசி என்பது, அறிவியல் நமக்கு வழங்கிய கொடை. அதன் உதவியால் கொரோனா அரக்கனை வெல்வோம்!

–மணிராஜ்,
திருநெல்வேலி

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.