May 25, 2024

Seithi Saral

Tamil News Channel

கரிசல் இலக்கியத்தின் தந்தை எழுத்தாளர் கி.ராஜநாயணன் மரணம்

1 min read

Death of K. Rajanayanan, the father of Karishal literature

18.5.2021

கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவரான எழுத்தாளர் கி.ராஜநாராயணன், புதுச்சேரியில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 99. உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை ஆகும். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசு மரியாதையுடன் கி.ரா. அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள கி.ரா. அவர்களின் உடலுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு நூலகமாக மாற்ற புதுச்சேரி அரசு பரிசீலிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘கரிசல் குயில்’ கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளைத் தொட்ட மகத்தான படைப்பாளி கி.ரா. அவருக்கு புகழஞ்சலி” என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “நூற்றாண்டு கொண்டாடுவார் என எதிர்நோக்கியிருந்த நேரத்தில் கி.ரா மறைந்திருப்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது” என்று தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.