May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

திருப்பதி மலையில் புதையல் இருப்பதாக 80 அடி சுரங்கம் தோண்டிய 5 பேர் கைது

1 min read

Five arrested for digging 80 feet mine in Tirupati

18.5.2021
திருப்பதி மலையில் புதையல் இருப்பதாக கருதி 80 அடி சுரங்கம் தோண்டிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி மலையில் புதையல்

ஆந்திர மாநிலம் செல்லூரை சேர்ந்தவர் சாமியார் ராமசாமி, அவருக்கு திருப்பதியில் பெயின்டர் வேலை செய்து வரும் மங்கு நாயுடு என்பவர் அறிமுகமானார்.

சாமியார் ராமசாமி மங்கு நாயுடுவிடம் திருப்பதி மலை அடியில் குறிப்பிட்ட இடத்தில் 120 அடி தொலைவு வரை சுரங்கம் தோண்டினால், இறுதியில் 2 அறைகள் வரும். அந்த அறைகளில் பெருமளவில் தங்கம், வைரம் உள்ளிட்ட பெரும் புதையல் உள்ளது என்று கூறினார்.

மேலும் நாம் சரியாக திட்டமிட்டு அந்த புதையலை எடுக்கலாம். அதற்கான வழிகளை நான் காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

சுரங்கம் தோண்டினர்

சாமியாரின் பேச்சை நம்பிய மங்கு நாயுடு கூலித் தொழிலாளர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு கடந்த ஓராண்டாக திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா காலனி பகுதியிலிருந்து மலைக்கு சென்று வனப்பகுதியில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த ஓராண்டில் இதுபோல் மேலும் 4 பேரின் உதவியுடன் மங்கு நாயுடு 5 அடி உயரத்தில் சுமார் 80 அடி தொலைவுக்கு சுரங்கம் தோண்டினார். இன்னும் 40 அடி தூரம் சுரங்கம் தோண்டி முடித்தால் புதையல் கிடைத்துவிடும் என்று அவர் நம்பினார்.

இந்த நிலையில் வெங்கடேஸ்வரா காலனி பகுதியில் அடிக்கடி சுற்றி திரிந்துக்கொண்டிருந்த மங்கு நாயுடுவின் நடவடிக்கைகள் மீது அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் திருப்பதி போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் மங்கு நாயுடுவை பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது

முதலில் அவர் செம்மரக்கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் நெல்லூர் சாமியார் ராமசாமி, புதையலுக்காக திருப்பதி மலையில் சுரங்கம் தோண்டச்சொன்ன உண்மைகளை மங்கு நாயுடு சொன்னார்.

மேலும் இன்னும் 40 அடி தோண்டினால் புதையல் கிடைத்து விடும் நாம் அதில் பங்கு போட்டு கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மங்கு நாயுடு மற்றும் கூலித் தொழிலாளர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

சுரங்கம் தோண்டச்சொன்ன சாமியார் ராமசாமி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.