ஊரடங்கில் மக்கள் வெளியில் சுற்றுவதை கட்டுப்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Court orders restraint of curfew
9.6.2021
ஊரடங்கில் மக்கள், வெளியில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கொரோனா காலத்தில் விலங்குகளுக்கு, உணவு மற்றும் குடிநீர் வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
நடவடிக்கை
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளியில் வழக்கமான செயல்கள் நடக்கின்றன. இதனை ஒழுங்குபடுத்த வேண்டும். ஊரடங்கில், மக்கள் வெளியில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அசவுகரியத்தை குறைக்கவே, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்த நேரத்தில் வெளியில் வரக்கூடாது என அறிவிக்க வேண்டும். ஊரடங்கில் தளர்வு மட்டும் அளிக்கப்பட்டு உள்ளது. முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. இயல்பு நிலை திரும்பியது போல் வெளியில் காட்சி அளிக்கிறது. இது கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை என தெரிவித்தனர்.
கனிவாக…
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், “கொரோனா முதல் அலையின் போது போலீசார் கடுமையாக நடந்து கொண்டதால், சில இடங்களில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது, போலீசார் கனிவாக நடந்து கொள்வதை மக்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்து கொள்கின்றனர்.” என்றார்.