மீன்வளம் பெருக கடலுக்குள் காலி பஸ்கள்
1 min read
Empty buses into the sea to increase fish stocks
13.6.2021
பாக் ஜலசந்தி கடலில் மீன்வளத்தை பெருக்க இலங்கை அரசு, கடற்படை கப்பல் மூலம், 40 பழைய பஸ்களை கடலுக்குள் போட்டு மீன்களுக்கு புகலிடம் ஏற்படுத்தியுள்ளது.
பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை உள்ள தமிழக விசை, நாட்டுப்படகு மீனவர்கள், இலங்கையில் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் இழுவலையால், இலங்கை பகுதியில் மீன் வளம் அழிந்து, மீனவர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்து உள்ளனர்’ என அந்நாடு மீன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார்.மீன்கள் இனப்பெருக்கத்திற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட, 60 நாட்கள் தடை காலம் நாளை முடிகிறது.
இதற்கிடையில் இலங்கை வடக்கு கடலில் மீன்வளத்தை பெருக்கிட, இலங்கை காங்கேசன் துறைமுகம் முதல் மன்னார் வரை உள்ள கடல் பகுதியில், 40 பழைய பஸ்களின் கூடுகளை கடலுக்குள் போட இலங்கை மீன்துறை முடிவு செய்தது. முதல் கட்டமாக நேற்று கடற்படை கப்பல் மூலம், 20 பழைய பஸ்களின் கூடுகளை கடலில் போட்டு வருகின்றனர். இப்பணி முடிந்த பின் மேலும், 20 பஸ் கூடுகளை கடலில் விட முடிவு செய்துள்ளனர்.இந்த பஸ் கூடுகள் மீன்களுக்கு புகலிடமாக மாறியதும், அதனுள் ஏராளமான மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.