தமிழகத்தில் சாலை விபத்துகள் 50 சதவீதம் குறைவு
1 min read
Road accidents in Tamil Nadu are 50 percent less
8/7/2021
தமிழகத்தில் சாலை விபத்துகள் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதற்கு ஒன்றிய மந்திரி கட்காரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
சாலை விபத்து
தமிழகத்தில் சாலை விபத்துகளையும், சாலை மரணங்களையும் 50 சதவீதம் குறைத்து இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
அவர், சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து காணொலி கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
வருகிற 2025ம் ஆண்டுக்குள் நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும், மரணத்தையும் பாதியாக குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.
வருகிற 2030ம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவதே இறுதி இலக்கு ஆகும்.
கடந்த ஆண்டு சுவீடனில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பங்கேற்றோம். அப்போது, வருகிற 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துகள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளோம்.
தமிழகம்
விரைவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை, மரணத்தை 50 சதவீதம் குறைத்து விடுவோம். அதனை நிறைவேற்றுவோம். நாங்கள் வகுத்த இந்த இலக்கை இன்று வெற்றிகரமாக தமிழகம் மட்டும் ஏற்கெனவே அடைந்து விட்டது.
அந்த மாநிலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 53 சதவீதம் குறைந்துள்ளது. அதற்காக எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.