வா.மு. சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்-அமைச்சர் உத்தரவு
1 min read
V.M. Sethuraman’s body to be paid last respects with police honours: Chief Minister orders
5.7.2025
மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் வயது மூப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் வா.மு சேதுராமன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மறைந்த தமிழறிஞரும் கவிஞருமான கலைமாமணி கவிக்கோ வா.மு. சேதுராமன் நேற்று அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து, அன்னாரின் உடலுக்கு முதல்-அமைச்சர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளைத் தமிழுலகிற்கு அளித்துள்ளவர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன். மேலும், அவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
பெருங்கவிக்கோ என்று அனைவராலும் அறியப்பட்ட மூத்த தமிழறிஞர் கலைமாமணி வா.மு. சேதுராமனை கவுரவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.