பாரத மாதாவை விமர்சித்த குற்றச்சாட்டில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது
1 min read
Pastor George Ponnaya arrested for criticizing Mother India
24.7.2021
பாரத மாதாவை விமர்சித்த குற்றச்சாட்டில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.
ஜார்ஜ் பொன்னையா
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் கடந்த மாதம் 18ஆம் தேதி சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத மாதா, இந்து கடவுள்கள், பிரதமர், அமித்ஷா பற்றி மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார்.
சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி சிறுபான்மையினர் போட்ட பிச்சை என்றும் பேசியிருந்தார்.
வருத்தம் தெரிவித்தார்
இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார், அதில் தனது பேச்சு எடிட் செய்யப்பட்டிருப்பதாகவும், பிற மதத்தினர் புண்படும்படி பேசியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஜார்ஜ் பொன்னையா மீது சட்ட விரோதமாக கூடுதல், சாதி, மதம் மற்றும் இரு தரப்பினரிடையே விரோதத்தை உருவாக்குதல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகள் மீது அவதூறு பரப்புதல் என 7 பிரிவுகளின் கீழ் அருமனை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைது
தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் பதுங்கியிருந்த பாதிரியாரை போலீசார் இன்று கைது செய்தனர்.