May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டம்

1 min read

Pegasus affair: Opposition MPs meeting

28.7.2021

பெகாசஸ் ஊழல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. அதன்பின் ராகுல்காந்தி நிருபர்களிடம் கூறும்போது பெகாசஸ் ஒட்டுக்கேட்பு பற்றி நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தப்படக்கூடாது? என்று கேள்வி விடுத்தார்.

நாடாளுமன்றக் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இந்த மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளே பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதனால் அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால் இரு அவைகளும் முடங்கின.

எதிர்க்கட்சிகள் ஆலோசனை

பெகாசஸ், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமை தாங்கினார் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிணைந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் ஒரு விவாதம் நடத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்தனர்.
மேலும் இந்தக்கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக்குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

ராகுல்காந்தி பேட்டி

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:

இந்தியாவின் ஜனநாயக அமைப்பிற்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை மோடியும் அமித்ஷாவும் ஏன் உபயோகப்படுத்தியுள்ளனர். பிரதமர் மோடி இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை காயப்படுத்தி விட்டார்

பெகாசஸ் ஆயுதம்

இந்த நாட்டின் இளைஞர்களிடம் நான் கேட்க விரும்புவது இதை தான். உங்கள் செல்போன்களுக்கு பிரதமர் மோடி பொகசஸ் எனும் ஆயுதத்தை அனுப்பினார். அதே ஆயுதத்தை எனக்கு எதிராகவும் அனுப்பியுள்ளார். நான் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பட்டாளர்கள் என பலரது செல்போன்களுக்கும் பெகாசஸ் ஆயுதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாசஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியைதான் தொடர்ந்து கேட்கிறோம். ஆம் அல்லது இல்லை என பதில் சொல்ல மறுக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை. எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம்.

பெகாசஸ் மென்பொருள் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தப்படக்கூடாது?

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.