May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது; கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

1 min read

Sri Lankan refugees cannot be granted citizenship; Federal argument in court

30.7.2021
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், “இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் குடியுரிமை வழங்க முடியாது,” என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாதிட்டார்.

இலங்கை அகதிகள் வழக்கு

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட கலெக்டர் மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

ஆனால், அதிகாரிகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி அந்த அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுதாக்கல் மீதான விசாரணை தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் நேற்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோதமாக குடியேறியவர்கள்

அப்போது, “இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே, அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது,” என மத்திய அரசு வாதம் செய்துள்ளது.
அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, “தனி நீதிபதியின் உத்தரவில் மனுவை பரிசீலிக்குமாறே உத்தரவிட்டுள்ளார். மனுவை பரிசீலித்து, குடியுரிமை வழங்குங்கள் அல்லது நிராகரியுங்கள். அதற்கு ஏன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்?” எனக் கேள்வியெழுப்பினார்.
இதனைதொடர்ந்து திருச்சி கொட்டப்பட்டு முகாம் அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது. எனவே, தமிழக அரசுக்கு இது குறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிடலாம்,” என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், “தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும்” எனக்கூறி ஆகஸ்டு 23-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.