படிப்பைத் தொடர கணவரை பிரிந்த புதுப்பெண்
1 min read
The newlyweds divorced their husbands to continue their studies
2.8.2021
பீகாரில் படிப்பைத் தொடருவதற்காக கணவனை பிரிய புது பெண்ணுக்கு கிராம பஞ்சாயத்து அனுமதி வழங்கி உள்ளது.
திருமணம்
பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டம் கங்கானியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோர்காட் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமாருக்கும் ஜஹாங்கிரா கிராமத்தைச் சேர்ந்த நேகா குமாரிக்கும் (வயது 19)கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.
12-ம் வகுப்பு படித்த நேகா தொடர்ந்து படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதை கணவரும் அவரது குடும்பத்தினரும் ஏற்காததால், வீட்டை விட்டு வெளியேறி பாட்னா சென்றுள்ளார் நேகா.
இதனிடையே, நேகாவின் தந்தை குருதேவ் பண்டிட்,தனது மகள் கடத்தப்பட்டிருக்கலாம் என சுல்தான்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அறிந்த நேகா, கங்கானியா பஞ்சாயத்து தலைவர் தாமோதர் சவுத்ரியை சந்தித்து முறையிட்டுள்ளார். இதையடுத்து, 2 குடும்பத்தினருக்கும் கிராம பஞ்சாயத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
பஞ்சாயத்து
கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் நேகாகூறும்போது, “என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். நான் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் இதை ஏற்க என் கணவர் மறுக்கிறார். எனவே கணவரை பிரிய அனுமதி வேண்டும்” என்றார்.
இதுகுறித்து தாமோதர் சவுத்ரி கூறும்போது, “இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தோம்.ஆனால் பலன் கிடைக்க வில்லை. இதையடுத்து, நேகாவின் விருப்பப்படி அவர் கணவரிடமிருந்து பிரிந்து செல்ல அனுமதி வழங்கினோம்” என்றார்.
வரும் காலத்தில் இந்த விவகாரத்தில் நேகாவை கட்டாயப்படுத்தக் கூடாது என இருதரப்பிலும் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து சுல்தான்கஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரி லால் பஹதுர் கூறும்போது, “கிராம பஞ்சாயத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்த நடவடிக்கை போலீஸ் மற்றும் நீதித் துறையின் சுமையைக் குறைக்கும் வகையில் உள்ளது” என கூறினார்.