கணவன் -மனைவி பிரித்த யூடியூப் வீடியோ
1 min read
Husband-Wife Divorced YouTube Video
12.8.2021
திருமணமான மூன்றாவது மாதத்திலேயே தன்னை விட்டு பிரிந்து சென்ற கணவன் பத்து மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் ஏன் தன்னிடம் வந்து சேரவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த இளம்பெண்ணுக்கு ஒரு யூடியூப் வீடியோதான் இந்த பிரிவுக்கு காரணம் என்பது தெரிந்து அதிர்ந்து போயிருக்கிறார். போலீசிலும் சென்று முறையிட்டிருக்கிறார்.
திருமணம்
விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா. இவர் செங்காடு கிராமத்தை சேர்த்த ஆரோக்கியராஜ் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் செங்காடு கிராமத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர்.
திருமணத்திலிருந்து மூன்றாவது மாதத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆரோக்கியராஜ் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல என்ன காரணம் என்று இத்தனை மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் அகிலா.
யூ டியூப்
அப்போதுதான் அவரது செல்போனுக்கு அந்த யூடியூப் வீடியோ வந்திருக்கிறது. அதை பார்த்த பின்னர்தான் இந்த வீடியோதான் தன் கணவரை தன்னிடமிருந்து பிரித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆரோக்கியராஜாவை திருமணம் செய்வதற்கு முன்பாக அகிலாவிற்கு பலரும் மாப்பிள்ளை பார்த்து வந்திருந்த நிலையில் செல்வராஜ் என்பவரின் மனைவியும் அகிலாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். அப்போது கண்டாச்சிபுரம் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல் ஜெயக்குமார் என்பவரை மாப்பிள்ளை பார்த்திருக்கிறார். அகிலாவிற்கு பிடித்துப்போக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்து வந்திருக்கிறது .திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்கிற முறையில் இருவரும் செல்போனில் பேசி வந்திருக்கின்றனர். பின்னர் நேரிலும் சந்தித்து இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். ஆனால் திருமணம் வரைக்கும் செல்லாமல் அந்த உறவு இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறது.
இந்த நிலையில்தான் ஆரோக்கியராஜ் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் ஆகியிருக்கிறது.
பழிவாங்க..
இதனால் ஆத்திரம் கொண்ட மைக்கேல் ஜெயக்குமார் மற்றும் செல்வராஜ் மனைவி இருவரும் இணைந்து அகிலாவை பழிவாங்க திட்டம் போட்டுள்ளனர். அதன்படி மாப்பிள்ளை பார்ப்பதற்காக கொடுத்த அகிலா போட்டோவை வைத்து மார்பிங் செய்து ஒரு வீடியோவை தயார் செய்து அதை செங்காடு பகுதியினருக்கும் தெளி கிராமத்தைச் சேர்ந்த பலருக்கும் அனுப்பி வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஆரோக்கிய ராஜாவுக்கு இந்த வீடியோ சென்று சேரும்படி அனுப்பி இருக்கின்றனர்.
அந்த வீடியோவை பார்த்த பின்னர் தான் அகிலாவை விட்டுப்பிரிந்து சென்றிருக்கிறார் ஆரோக்கிய ராஜா . தனது திருமண வாழ்க்கை இந்தநிலைக்கு ஆனதற்கு காரணம் மைக்கேல் ஜெயக்குமாரும் செல்வராஜின் மனைவி தான் என்பதை உறுதிசெய்த அகிலா, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று இருவரும் மீதும் புகார் அளித்திருக்கிறார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.